பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி உத்தரவு பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனரும் ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான பூஜா குல்கர்னி உத்தரவிட்டார். முதல்வர் ஜெயலலிதா அக்கறை தமிழ்நாட்டில் உளள அனைத்து பள்ளிகளும் சுத்தமாக இருக்கவேண்டும், மாணவ-மாணவிகள் அனைவரும் ஆரோக்கியத்துடன் கல்வி கற்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அக்கறை கொண்டுள்ளார். இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்திருக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களின் கழிவறைகள் பழுதடைந்து இருந்தால் அவற்றை சரிசெய்து கொடுக்கவேண்டும் அல்லது கழிவறை இல்லாதிருந்தால் அவற்றை கட்டிக்கொடுக்கவேண்டும் என்று அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கழிவறை வசதி செய்யப்பட்டு வருகின்றது. பெரும்பாலான பள்ளிகளில் இந்த பணி முடிவடைந்துவிட்டது. கருத்தரங்கு மேலும் பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்ற தலைப்பில் சென்னை யில் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் மற்றும் யூனிசெப் நிறுவனம் சார்பில் 2 நாள் கருத்தரங்கு தொடங்கியது. கருத்தரங்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்திருப்பதை கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அனைவருக் கும் கல்வி திட்ட தமிழ்நாடு மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி பேசுகையில் கூறியதாவது:- குடிநீர் வசதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் பள்ளிக்கூடத்திற்கு தண்ணீர்போதிய அளவுக்கு வரவில்லை. இருப்பினும் மாணவ- மாணவிகள் அனைவரும் சாப்பிடும்போது கண்டிப்பாக சோப் போட்டு கைகளை கழுவி விட்டு சாப்பிடவேண்டும். மாணவ-மாணவிகள் இந்த பணியை சரியாக செய்கிறார்களா? என்று தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கண்காணிக்கவேண்டும். மேலும் பள்ளிக்கூடங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். அதாவது அவர்கள் பள்ளிக்கூடங்களை அடிக்கடி ஆய்வு செய்து உறுதிப்படுத்தவேண்டும். பள்ளிக்கூடத்தை சுத்தப்படுத்த மாணவர்களை மொத்தமாக பயன்படுத்தலாம். ஆனால் தனிப்பட்ட மாணவரையோ அல்லது மாணவியையோ பயன்படுத்தக்கூடாது. ஒரு மாணவர் கழிப்பிடத்தை பயன்படுத்தினால் அவர் அந்த கழிப்பிடத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும். இவ்வாறு பூஜா குல்கர்னி கூறினார். தமிழ்நாடு, கேரளா மற்றும் யூனிசெப் முதன்மை அதிகாரி ஜாப் சச்சாரியா பேசுகையில் கூறியதாவது:- விழிப்புணர்வு தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் பல முன்னோடி திட்டங்களை கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிக்கூட மாணவர்கள் கைகழுவி விட்டு சாப்பிடுகிறார்கள். ஆனால் சோப் போட்டு கையை கழுவி விட்டு சாப்பிடவேண்டும். இந்த நடைமுறையின்படி 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்து மாணவர்களும் சோப் போட்டு கை கழுவி விட்டு சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். இந்த காரியத்தில் அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராஜேந்திர தத்னு, யூனிசெப் தமிழ்நாடு, கேரளா மாணவர்கள் கைகழுவுவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பு அதிகாரி அருண் டோபால், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், எஸ்.கண்ணப்பன், இணை இயக்குனர்கள் கார்மேகம், பழனிச்சாமி, உஷாராணி, நரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் அனைவருக்கும் கல்விதிட்ட இணை இயக்குனர் எஸ்.நாகராஜ முருகன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் என்.காயத்திரி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment