அரியலூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில், 2.16 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக மாவட்ட வன அலுவலர் நயினார்முகமது தெரிவித்தார்.அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டத்தை பசுமையாக மாற்றும் வகையில், மரக்கன்றுகள் நடும் பணியை அரியலூர் புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்த பிறகு அவர் கூறியது:அரியலூர் மாவட்டம் தற்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த மாவட்டத்தில் 2.16 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதன்படி, அரியலூர் நகர்ப்புறத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் கூண்டு வைத்து நடப்படுகிறது. அரியலூர் புறவழிச் சாலை ஓரத்தில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. மேலும், அரியலூர் அரசுக் கலைக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றிவிட்டு புங்கமரம், வேம்பு, நாவல், மயில் கொன்னை போன்ற மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்தப் பணியில் வனச் சரக அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.காடுகள் 33% இருக்க வேண்டும். ஆனால், அரியலூர் மாவட்டத்தில் 4.5% காடுகளே உள்ளன. இதை அதிகரிக்கும் பொருட்டே இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இவ்வாறு நடப்படும் மரங்களுக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சப்படும்.மேலும், தனியார் நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களின் தேவைக்கேற்ப மரக்கன்றுகள் வழங்கப்படும்.மரக்கன்றுகள் தேவைப்படுவோருக்கு வன அலுவலர்கள் அவர்களின் இடத்துக்கே சென்று கன்றுகளை கொடுப்பார்கள். பொதுமக்கள் தங்களுடைய கால்நடைகள் மரக்கன்றுகளை தின்றுவிடாமல், பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் மாவட்ட வனச் சரக அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment