திருக்குறள்

31/10/2013

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!


ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 17,18 தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இவற்றின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் மீது உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் சலுகைகளை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ரமேஷ், ராஜரத்தினம் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாத இறுதியில் மனுத்தாக்கல் செய்தனர். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் படி இவ்வாறு சலுகை வழங்க இடமுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். சில வடமாநிலங்களில் வழங்கப்பட்டு வரும் இந்த சலுகை தமிழகத்தில் அமல்படுத்தும் வரை, தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்யநாராயணா உள்ளிட்ட அமர்வு தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்துவிட்டது. அதே சமயம் ஆசிரியர் தகுதி தேர்வு வாயிலாக நடத்தப்படும் நியமனங்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவையாக இருக்குமென்றும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment