திருக்குறள்

29/11/2014

மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்:

குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது, கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் வாசிப்பு திறன் தொடர்பாக, மாவட்டம் வாரியாக ஆய்வு நடத்துமாறு, கல்வித்துறை அலுவலர்களுக்கு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டது. துவக்கப் பள்ளிகள், நடு நிலைப் பள்ளி மாணவர்களில் சிலர், படிப்பில் பின்தங்கியவர்களாக கண்டறியப்பட்ட நிலையில், அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் திட்டமாக, இந்த ஆய்வு நடத்தப்பட்டது. எளிமையான கேள்விகள் கொண்ட வினாத்தாள் உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து, மாணவர்களுக்கு முன்சோதனை தேர்வு நடத்தப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கிராமப்புறங்களை காட்டிலும், நகரப்புற மாணவர்களிடம் வாசிப்பு திறன் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. பல குழந்தைகளின் பெற்றோர், வெளி மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்களாக இருப்பதால், அடிக்கடி வசிப்பிட மாற்றம் அவர்களின் கல்வியை பாதிக்கிறது. படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களுடன் நட்பு கொள்ளும்போது, படிப்பை விட்டு கவனம் சிதறுகிறது. நெருக்கடியும், போக்குவரத்தும் அதிகமாக உள்ள அமைதியற்ற வாழ்விட சூழலால், வீடுகளில் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கைவிடுகின்றனர். சினிமா நடிகர்கள் மீதான ஆர்வம், டிவி பார்க்கும் பழக்கம், கிரிக்கெட் போன்றவற்றில் இருக்கும் அபரிமிதமான ஆர்வம், படிப்பில் மாணவர்களின் கவனத்தை குறைத்து விடுகிறது. எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால், மாணவர்களை கட்டாயப்படுத்தி படிக்கச் சொல்லும் மனநிலை, சில ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment