திருக்குறள்

13/12/2014

நாங்கதான் ஆளணும்... மத்தவங்க அதுக்குள்ள வாழணும்’ - மாணவர்களின் சாதிவெறி!





தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. ஆனால் வன்முறைகளுக்கு எப்போதும் பள்ளிக்கூடங்கள் விதிவிலக்காகத்தான் இருந்து வந்துள்ளன. அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் மாணவப் பருவம் என்பது வன்முறைகள் மேவும் பருவம் அல்ல.

விளையாட்டிலும் தங்களுக்கு விருப்பமான விஷயங்களிலும் மனநாட்டம் கொள்வதுதான் மாணவர் பருவத்தின் இயல்பு. அது சினிமா, கவிதை, ஓவியம், விளையாட்டு, காதல் என பலவாறாக அமையும். இதுதான் பதின் பருவத்தின் இயல்பு. ஆனால் இந்த இயல்பை மீறி கூட்டுக் கலவரங்களிலும், கொலைகளிலும் ஈடுபடுவது இப்போது தமிழக மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது.

மாணவச் சமூகத்தை ஆட்டிப்படைப்பது சாதி வெறி. குறிப்பாக தென் தமிழக பள்ளிகளில் ஒவ்வொரு சாதி மாணவர்களும் அவரவர் சாதித் தலைவர்களை சுமந்து திரிவதும், பள்ளி பாடப்புத்தகத்தில் பிற சாதி தலைவர்களின் படங்களை கிழித்தெறியும் அளவுக்கு இந்த சாதி வெறி ஊட்டப்பட்டிருக்கிறது. பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்களைக் கூட சாதிக்கண் கொண்டு பார்க்கும் பார்வையை ஊட்டி விட்டார்கள் சாதித் தலைவர்கள். அதன் விளைவு குழு குழுவாக பிரிந்து நிற்கிறார்கள் மாணவர்கள்.

இன்னொரு பக்கம் சின்ன சின்ன மோதல்கள் கூட கொலையில் முடியும் சூழல். சென்னையில் ஆசிரியை உமாமகேஸ்வரி கொலைக்குப் பின்னர் அடுத்தடுத்து அதிர்ச்சி நிகழ்வுகள். கோவை சித்தா புதூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஒரு மாணவரின் சாதிப் பெயரைச் சொல்லி திட்ட, திரண்ட மாணவர்கள் தலைமை ஆசிரியரின் அறையை அடித்து நொறுக்கி வகுப்பறைகளையும் துவம்சம் செய்து விட்டார்கள்.

சாதியைச் சொல்லி திட்டிய தலைமை ஆசிரியர், அதற்கு பதிலடியாக வகுப்பறைகளை நொறுக்கிய மாணாவர்கள்... இப்படி இரு தரப்பிலும் வெளிப்படும் சாதி உணர்வு, தமிழ் சமூகம் சாதியாக பிளவுபட்டிருப்பதன் அடையாளம். நாமெல்லாம் தமிழர்கள் என்று சொல்லலாம். ஆனால் கிராமங்களில் கேட்டால்,‘‘நாங்க வேற அவுக வேற’’ என்றுதான் சொல்வார்கள். இந்த சாதி முரண் இத்தோடு முடியாமல் ஒரு மாணவனின் நல்லொழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளை அவனது சாதியை வைத்து அளவிட தூண்டுகிறது. ஆக மொத்தம் அந்த தலைமை ஆசிரியர் சமூகத்தை வகுப்பறையில் பிரதிபலித்திருக்கிறார்.

சமீபத்தில் தென் மாவட்டம் ஒன்றுக்குச் சென்றபோது மீசை கூட முளைக்காத சிறுவர்கள், தங்களின் சாதியின் பெயரை போட்டு திருமண வாழ்த்து போஸ்டர் ஒட்டியிருப்பதைக் காண முடிந்தது. அது வெறும் வாழ்த்து போஸ்டராக மட்டும் இல்லை. ‘‘நாங்கதான் ஆளணும். மத்தவங்க அதுக்குள்ள வாழணும்’’ என்று தன் சாதி பெயரை போட்டு போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். 

இந்த பருவத்தில் இத்தனை சாதி உணர்வு ஏன்? என்று எண்ணும்போது, தமிழர்கள் அரசியல் ரீதியாக அழிந்து சாதி ரீதியாக பிளவுபட்டுக் கிடப்பது தெரிகிறது. முந்தைய தலைமுறையைக் காட்டிலும் அது பெரிய தீயாக கிராமப்புறங்களில் பரவி இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா நடவடிக்கையால் கல்வித்துறையில் வளர்ச்சி: ஜெயவர்த்தன் எம்.பி பேச்சு

மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி கல்வித்துறை வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவை விலையில்லா புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள், பள்ளி புத்தக பைகள், சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி ஆகும். புரட்சித்தலைவியால் எடுக்கப்பட்ட இந்த முற்போக்கான நடவடிக்கை பெற்றோரின் நிதி சுமையைக் குறைத்துள்ளது. மேலும் பள்ளியிலிருந்து இடையில் படிப்பை நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைத்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு போதியளவு நிதி வழங்க வேண்டும். பிரதமரிடம் புரட்சித்தலைவியால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், ராஷ்டிரிய மத்திய மிக் சிஷ்கா அபிநயன் என்ற திட்டத்தின் படி இந்திய அரசு 2010–2011 மற்றும் 2011–2012 ஆண்டுகளுக்காக மொத்த கோரிக்கைகளில் நிலுவையில் உள்ள ரூ.599.62 கோடி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின்படி ரூ.25.13 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டியுள்ளது. பட்டியல் சாதி மாணவர்களுக்காக மெட்ரிக்குலேசன் படிப்பு உதவித்தொகைக்காக 2013–2014 ஆண்டிற்கான நிலுவை ரூ.451.41 கோடி உள்ளடங்கலாக ரூ.1104.20 கோடி ரூபாய் மத்திய அரசால் வழங்கப்பட வேண்டியுள்ளது.

செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு அறிவிப்பு

செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஆசிரியர்களின் ஊதியத்தை போல் தமிழகத்திலும் வழங்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்குமாறு' ஐகோர்ட் உத்தரவிட்டது. 'நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1,017 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 129பேர் பணிபுரிகின்றனர். மத்திய அரசு ஆசிரியர்களை போல் அவர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி கூடுதல் செலவாகும். இதனால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர் சண்முகம் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தக் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் இல்லை: அரசு உத்தரவு

அரையாண்டுத் தேர்வு தொடங்கிவிட்ட நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இந்தக் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் இந்த அரசாணை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

அலைமோதும் கூட்டம்: இடமாறுதல் கோரி பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கும், தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கும் ஏராளமானோர் தினந்தோறும் வருகிறார்கள்.

கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்களான பிறகும் பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி இந்தக் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு இனி இடமாறுதல் இல்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2011, 2012, 2013ம் ஆகிய ஆண்டுகளில் புதிப்பிக்க தவறிய வர்களுக்கு, தற்போது புதுப்பிக்க, மூன்று மாத காலம் சிறப்பு சலுகைஅளிக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2011, 2012, 2013ம் ஆகிய ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறியவர்களுக்கு, மீண்டும் புதுப்பிக்க ஏதுவாக, மூன்று மாதம் காலம் சிறப்பு சலுகையளிக்கப்பட்டுள்ளது. 07.03.2015 தேதி வரை, கடந்த காலத்தில் புதுப்பிக்க தவறியவர்கள், தற்போது, http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ சென்று புதிப்பிக்கலாம். இந்த அறிவிப்பை, தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை வெளியிட்டுள்ளது.

ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.

11/12/2014

பாரதியார் பிறந்த தினமான இன்று போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை


மூன்றாம் பருவத்துக்கு டிசம்பர் 22 முதல் புத்தகங்கள் விநியோகம்

முப்பருவ முறையின் கீழ், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 22-ஆம் தேதி விநியோகிக்கப்பட உள்ளதாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

முப்பருவ முறையின் கீழ் ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவமாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாவது பருவமாகவும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாவது பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை, தொடர் மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்தப் பணிகள் தொடர்பாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் கூறியது:

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்துப் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஒன்பதாம் வகுப்பு புத்தகங்கள் மட்டும் இப்போது அச்சடிக்கப்பட்டு வருகின்றன.

மூன்றாம் பருவத்துக்கு சுமார் 2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் அந்தந்த வட்டார விற்பனைக் கிடங்குகளிலிருந்து டிசம்பர் 22-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

அரசுப் பள்ளிகளுக்கான புத்தகங்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும். மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும் முதல் நாளில் புத்தகங்கள் கிடைக்கும் வகையில் வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு மாநிலம் முழுவதும் புதன்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்வு டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தேர்வும் டிசம்பர் 23-ஆம் தேதி நிறைவடைகிறது. பிற வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகளும் டிசம்பர் 12-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

CPS : பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைய மேலும் 3 மாத கால அவகாசம்: தமிழக அரசு உத்தரவு


CPS : பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைய மேலும் 3 மாத கால அவகாசம்: தமிழக அரசு உத்தரவு

CLICK HERE FOR ORDER

தமிழகத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அவர்கள் சம்பளம் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏதும் இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, நிதித் துறை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு:

கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசுத் துறைகளிலும், ஆசிரியர் பணியிலும் இணைந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேரும் போது அதற்கான முகப்பு எண் வழங்கப்படுவது வழக்கம்.

இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு தரவு மையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பங்களிப்பு ஓய்வூயத் திட்டத்தில் இணைந்து அதற்கான முகப்பு எண்ணை ஒவ்வொரு ஊழியர்களும் பெற்றுள்ளார்களா? என்பதை அவர்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதுகுறித்து, கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரியிடம் தெரிவிப்பது அவசியம்.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை ஒவ்வொரு துறையிடம் இருந்து பெற்று விண்ணப்பதாரர்களுக்கு உரிய முகப்பு எண்ணை (இன்டெக்ஸ் நம்பர்) அளிக்கும் பணியை மாநில தரவு மையம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணியில் எந்தத் தாமதமும் ஏற்படாமல் உரிய நேரத்தில் முகப்பு எண்ணை வழங்க வேண்டும்.

முகப்பு எண் வழங்கப்படாமல் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. ஆனாலும், உரிய முறையில் விண்ணப்பித்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான முகப்பு எண்ணைப் பெறுவதற்கு வரும் பிப்ரவரி மாதம் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ளாத, அதற்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியல்கள் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால், அந்த காலத்துக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, மூன்று மாத காலத்துக்குள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பித்து அதற்கான முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தனது உத்தரவில் நிதித் துறை செயலாளர் க.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த உத்தரவு அனைத்துத் துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், சட்டப் பேரவைச் செயலகம், துறை ஆணையாளர்கள், முதன்மை கணக்காயர், கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் அனைத்து மண்டல அலுவலகங்கள், உயர் நீதிமன்ற பதிவாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள், அரசு சார்பிலான வாரியங்கள், கழகங்கள், மாநகராட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

63 உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள், தணிக்கை விவரங்களை சமர்பிக்கவில்லை. இதனால், தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரகம், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அந்த அலுவலக பணியாளர்கள் மீது, நன்னடத்தை விதிமீறல் படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

ஏ.இ.இ.ஓ.,க்கள் 63 பேருக்கு தொடக்க கல்வித்துறை 'மெமோ'

ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்பிக்காததால், தமிழகம் முழுவதும், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, 'மெமோ' வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தொடக்க மற்றும் நகராட்சி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின், வருங்கால சேம நலநிதி கணக்கு மற்றும் ஐந்தாவது ஊதியக்குழு முடிவு இருப்பு தொகை தணிக்கை ஆகியவை, ஆண்டு தோறும், தமிழக தகவல் தொகுப்பு விவர மைய கமிஷனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆண்டு, 63 உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள், தணிக்கை விவரங்களை சமர்பிக்கவில்லை. இதனால், தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரகம், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அந்த அலுவலக பணியாளர்கள் மீது, நன்னடத்தை விதிமீறல் படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

கடிதம் எழுதும் போட்டிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22 கடைசி நாள்

இந்திய அஞ்சல் துறை சார்பில் நடைபெறும் கடிதம் எழுதும் போட்டிக்கு, டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய அஞ்சல் துறை சார்பில்,

44-ஆவது உலக அஞ்சல் ஒன்றியத்தின் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.

ரொக்கப் பரிசுகள் தவிர்த்து, தேசியளவில் சிறந்த கடிதமாக தேர்வு பெறும் முதல் மூன்று தேர்வாளர்களுக்கு உலக அஞ்சல் ஒன்றியம் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுடன் அஞ்சல் தலைகள் அடங்கிய ஆல்பம், சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்படும்.

சென்னையில் மேற்கு மாம்பலம், ஜூப்ளி சாலையில் உள்ள அஞ்சுகம் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 4-ஆம் தேதி, காலை 10-11 மணி வரை போட்டி நடைபெறும்.

போதுமான எண்ணிக்கையில் போட்டியாளர்கள் இருப்பின் பள்ளிகள் தங்கள் சொந்த வளாகத்தில், திட்டமிட்ட தேதி, நேரத்தில் கடிதம் எழுதும் போட்டியை நடத்தலாம்.

"நீங்கள் வளர விரும்பும் உலகம் பற்றி சொல்லுங்கள்" என்ற தலைப்பில் ஆங்கிலம் அல்லது இந்திய அரசியல் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட மொழியில் விவரித்து ஒரு கடிதம் எழுத வேண்டும்.

இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22-ஆம் தேதி கடைசி நாளாகும். மதுரை, கோவை, திருச்சி ஆகிய மையங்களிலும் போட்டி நடைபெறும்.

ஜி.க.பொன்னுரங்கம், உதவி இயக்குநர் (அஞ்சல்,அமைப்பு), அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், சென்னை நகர மண்டலம், சென்னை-600002 என்ற முகவரியிலும், pmgccrtca@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி, 044-28580048,28520430, 28551774 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அந்தந்த நகரங்களில் உள்ள அஞ்சல் துறைத் தலைவர்களையும் அணுகலாம் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி

CLICK HERE-ADMINISTRATIVE TRAINING FOR ALL AEEO'S ILL HELD AT CHENNAI SIEMAT MEETING HALL