முப்பருவ முறையின் கீழ், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 22-ஆம் தேதி விநியோகிக்கப்பட உள்ளதாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
முப்பருவ முறையின் கீழ் ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவமாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாவது பருவமாகவும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாவது பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை, தொடர் மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்தப் பணிகள் தொடர்பாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் கூறியது:
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்துப் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஒன்பதாம் வகுப்பு புத்தகங்கள் மட்டும் இப்போது அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
மூன்றாம் பருவத்துக்கு சுமார் 2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் அந்தந்த வட்டார விற்பனைக் கிடங்குகளிலிருந்து டிசம்பர் 22-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
அரசுப் பள்ளிகளுக்கான புத்தகங்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும். மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும் முதல் நாளில் புத்தகங்கள் கிடைக்கும் வகையில் வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு மாநிலம் முழுவதும் புதன்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்வு டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தத் தேர்வும் டிசம்பர் 23-ஆம் தேதி நிறைவடைகிறது. பிற வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகளும் டிசம்பர் 12-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment