CPS : பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைய மேலும் 3 மாத கால அவகாசம்: தமிழக அரசு உத்தரவு
CLICK HERE FOR ORDER
தமிழகத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அவர்கள் சம்பளம் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏதும் இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நிதித் துறை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு:
கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசுத் துறைகளிலும், ஆசிரியர் பணியிலும் இணைந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேரும் போது அதற்கான முகப்பு எண் வழங்கப்படுவது வழக்கம்.
இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு தரவு மையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பங்களிப்பு ஓய்வூயத் திட்டத்தில் இணைந்து அதற்கான முகப்பு எண்ணை ஒவ்வொரு ஊழியர்களும் பெற்றுள்ளார்களா? என்பதை அவர்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதுகுறித்து, கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரியிடம் தெரிவிப்பது அவசியம்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை ஒவ்வொரு துறையிடம் இருந்து பெற்று விண்ணப்பதாரர்களுக்கு உரிய முகப்பு எண்ணை (இன்டெக்ஸ் நம்பர்) அளிக்கும் பணியை மாநில தரவு மையம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணியில் எந்தத் தாமதமும் ஏற்படாமல் உரிய நேரத்தில் முகப்பு எண்ணை வழங்க வேண்டும்.
முகப்பு எண் வழங்கப்படாமல் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. ஆனாலும், உரிய முறையில் விண்ணப்பித்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான முகப்பு எண்ணைப் பெறுவதற்கு வரும் பிப்ரவரி மாதம் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ளாத, அதற்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியல்கள் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால், அந்த காலத்துக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, மூன்று மாத காலத்துக்குள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பித்து அதற்கான முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தனது உத்தரவில் நிதித் துறை செயலாளர் க.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த உத்தரவு அனைத்துத் துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், சட்டப் பேரவைச் செயலகம், துறை ஆணையாளர்கள், முதன்மை கணக்காயர், கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் அனைத்து மண்டல அலுவலகங்கள், உயர் நீதிமன்ற பதிவாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள், அரசு சார்பிலான வாரியங்கள், கழகங்கள், மாநகராட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment