திருக்குறள்

13/12/2014

நாங்கதான் ஆளணும்... மத்தவங்க அதுக்குள்ள வாழணும்’ - மாணவர்களின் சாதிவெறி!





தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. ஆனால் வன்முறைகளுக்கு எப்போதும் பள்ளிக்கூடங்கள் விதிவிலக்காகத்தான் இருந்து வந்துள்ளன. அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் மாணவப் பருவம் என்பது வன்முறைகள் மேவும் பருவம் அல்ல.

விளையாட்டிலும் தங்களுக்கு விருப்பமான விஷயங்களிலும் மனநாட்டம் கொள்வதுதான் மாணவர் பருவத்தின் இயல்பு. அது சினிமா, கவிதை, ஓவியம், விளையாட்டு, காதல் என பலவாறாக அமையும். இதுதான் பதின் பருவத்தின் இயல்பு. ஆனால் இந்த இயல்பை மீறி கூட்டுக் கலவரங்களிலும், கொலைகளிலும் ஈடுபடுவது இப்போது தமிழக மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது.

மாணவச் சமூகத்தை ஆட்டிப்படைப்பது சாதி வெறி. குறிப்பாக தென் தமிழக பள்ளிகளில் ஒவ்வொரு சாதி மாணவர்களும் அவரவர் சாதித் தலைவர்களை சுமந்து திரிவதும், பள்ளி பாடப்புத்தகத்தில் பிற சாதி தலைவர்களின் படங்களை கிழித்தெறியும் அளவுக்கு இந்த சாதி வெறி ஊட்டப்பட்டிருக்கிறது. பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்களைக் கூட சாதிக்கண் கொண்டு பார்க்கும் பார்வையை ஊட்டி விட்டார்கள் சாதித் தலைவர்கள். அதன் விளைவு குழு குழுவாக பிரிந்து நிற்கிறார்கள் மாணவர்கள்.

இன்னொரு பக்கம் சின்ன சின்ன மோதல்கள் கூட கொலையில் முடியும் சூழல். சென்னையில் ஆசிரியை உமாமகேஸ்வரி கொலைக்குப் பின்னர் அடுத்தடுத்து அதிர்ச்சி நிகழ்வுகள். கோவை சித்தா புதூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஒரு மாணவரின் சாதிப் பெயரைச் சொல்லி திட்ட, திரண்ட மாணவர்கள் தலைமை ஆசிரியரின் அறையை அடித்து நொறுக்கி வகுப்பறைகளையும் துவம்சம் செய்து விட்டார்கள்.

சாதியைச் சொல்லி திட்டிய தலைமை ஆசிரியர், அதற்கு பதிலடியாக வகுப்பறைகளை நொறுக்கிய மாணாவர்கள்... இப்படி இரு தரப்பிலும் வெளிப்படும் சாதி உணர்வு, தமிழ் சமூகம் சாதியாக பிளவுபட்டிருப்பதன் அடையாளம். நாமெல்லாம் தமிழர்கள் என்று சொல்லலாம். ஆனால் கிராமங்களில் கேட்டால்,‘‘நாங்க வேற அவுக வேற’’ என்றுதான் சொல்வார்கள். இந்த சாதி முரண் இத்தோடு முடியாமல் ஒரு மாணவனின் நல்லொழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளை அவனது சாதியை வைத்து அளவிட தூண்டுகிறது. ஆக மொத்தம் அந்த தலைமை ஆசிரியர் சமூகத்தை வகுப்பறையில் பிரதிபலித்திருக்கிறார்.

சமீபத்தில் தென் மாவட்டம் ஒன்றுக்குச் சென்றபோது மீசை கூட முளைக்காத சிறுவர்கள், தங்களின் சாதியின் பெயரை போட்டு திருமண வாழ்த்து போஸ்டர் ஒட்டியிருப்பதைக் காண முடிந்தது. அது வெறும் வாழ்த்து போஸ்டராக மட்டும் இல்லை. ‘‘நாங்கதான் ஆளணும். மத்தவங்க அதுக்குள்ள வாழணும்’’ என்று தன் சாதி பெயரை போட்டு போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். 

இந்த பருவத்தில் இத்தனை சாதி உணர்வு ஏன்? என்று எண்ணும்போது, தமிழர்கள் அரசியல் ரீதியாக அழிந்து சாதி ரீதியாக பிளவுபட்டுக் கிடப்பது தெரிகிறது. முந்தைய தலைமுறையைக் காட்டிலும் அது பெரிய தீயாக கிராமப்புறங்களில் பரவி இருக்கிறது.

No comments:

Post a Comment