திருக்குறள்

04/06/2015

இந்த ஆண்டும் ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் இல்லை

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய முறையை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய வகையில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அட்டை வழங்க அரசு திட்டமிட்டது. இதற்காக மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்தது. 2015-16 கல்வியாண்டில் இந்த 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்படும் என, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர்.

ஒரு சில நிர்வாக காரணத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பழைய திட்டப்படியே மாணவர்களுக்கு பஸ் பாஸ் ஏற்பாடு செய்து கொடுக்க அரசு உத்தர விட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு மாணவரின் பெயர், முகவரி, பெற்றோரின் தொழில், ரத்த வகை, உட்பட பல்வேறு புள்ளி விவரங்களுடன் கூடிய 'ஸ்மார்ட்' கார்டு வழங்க ஏற்பாடு நடந்தது. இக்கார்டிலுள்ள தகவல்கள் ஆன்-லைனில் பதிவு செய்யப்படும். ஒரு மாணவர் பற்றிய விவரம் அறிய கார்டு மட்டும் இருந்தால் போதும் .

இதற்கான இயந்திரத்தில் பொருத்தினால் அனைத்து தகவல்களை பெற முடியும். இதற்கான பணி முடியாததால் ,இவ்வாண்டு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழைய திட்டப்படியே அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை பெற்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் இலவச பஸ் பாசை உடனே பெற அரசு அறிவுறுத்தியுள்ளது, என்றார்.மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்கள் முழுமையாக கிடைக்காத நிலையில் திட்டம் நிறைவேறுமா? அல்லது கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment