திருக்குறள்

18/06/2015

தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள மழலையர் பள்ளிக்கான வரைவு விதி

அங்கீகாரம் ஏற்கனவே தொடங்கப்பட்ட, புதிதாக தொடங்கப்பட உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளும், இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் தங்களது பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறவேண்டும். இந்த அங்கீகாரங்களை வழங்கும் அதிகாரம் கொண்ட அதிகாரி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆவார். அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று அந்தந்த மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (நர்சரி), உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் கொண்ட கமிட்டி ஆய்வு செய்யவேண்டும். அதன்பின்னர் அந்த பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குவதா? அல்லது நிராகரிப்பதா? என்பதை ஒரு மாதத்துக்குள் முடிவு செய்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
தரைத்தளம்
இவ்வாறு வழங்கப்படும் அங்கீகாரத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட பள்ளிகள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இப்போது உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறினாலோ, தவறாக பயன்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அதிகாரிகள் திரும்பப் பெறலாம்.

மழலையர் பள்ளிகள் சொந்த கட்டிடம் அல்லது குத்தகைக்கு கட்டிடத்தில் இயங்கவேண்டும். குத்தகை கட்டிடம் என்றால், அந்த குத்தகை ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும். பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டியிருக்க வேண்டும். முள்வேலி, பிறவகை வேலிகள் அமைக்கக் கூடாது. வகுப்பு அறையில் ஒரு குழந்தைக்கு 10 சதுர அடி இடம் ஒதுக்கப்படவேண்டும். வகுப்புகள் அனைத்தும் தரைத்தளத்தில் இருக்க வேண்டும். வகுப்பறையில் இரண்டு நுழைவு வாயில்கள் இருக்க வேண்டும். அந்த கதவுகள், ஜன்னல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.

குற்ற பின்னணி
தண்ணீர் வசதியுடன் கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள், திறந்த வெளி நிலம், விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் நுழைவு வாயில், வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையை ஒட்டியும், குப்பை கொட்டும் பகுதிக்கு அருகிலும் இருக்கக்கூடாது. தீயணைப்பு எந்திரங்கள் வைத்திருக்க வேண்டும். 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு உதவியாளர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்கள், உதவியாளர்கள், ஊழியர்கள் ஆகியோரை நியமிப்பதற்கு முன்பு அவர்கள் குற்ற பின்னணி உடையவர்களா? என்பதை உள்ளூர் போலீசாரிடம் பள்ளி நிர்வாகம் சரி பார்க்கவேண்டும்.

அவர்கள் தொற்று நோய் எதுவும் இல்லை என்பதை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும்.
மருத்துவ வசதி
இந்த பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ந் அன்று ஒன்றரை வயது பூர்த்தியான குழந்தைகளை மட்டும் சேர்க்க வேண்டும். வயது வரம்பில் எந்த விலக்கும் அளிக்கக்கூடாது. ஒரு வகுப்பு அறைக்கு 15 குழந்தைகளை மட்டுமே சேர்க்கவேண்டும். அதற்குமேல் குழந்தைகளை சேர்க்க தடை விதிக்கப்படுகிறது.
பள்ளியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் வசிக்கும் குழந்தைகளை மட்டுமே பள்ளியில் சேர்க்க வேண்டும். காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை வேலை நேரமாக இருக்கவேண்டும்.

ஒரு மணி நேரத்துக்கு 15 நிமிடம் இடைவேளை வழங்க வேண்டும். பள்ளிக்குள் நுழையும்போது, வீட்டுக்கு செல்லும்போதும் குழந்தைகள் குறித்த விவரங் களை பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். முதலுதவி வசதி, மருத்துவ வசதி இருக்க வேண்டும்.
அடித்தால் வழக்கு
பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளை ஒருபோதும் அடிக்கக்கூடாது. ஒருவேளை குழந்தைகளை அடித்தால், அந்த பள்ளி நிர்வாகம் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குழந்தைகளின் பெற்றோரின் வீட்டு முகவரி, இ-மெயில், தொலைப்பேசி எண் ஆகியவை வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட்டு, இசை, மழலை பாடல்கள், கலை உள்ளிட்டவைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் பயணம் நேரம் இருக்கக்கூடாது. வாகனத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்க வேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இந்த பள்ளிகளை எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்.
இவை உள்பட ஏராளான விதிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment