திருக்குறள்

09/06/2015

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்.பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளதை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சிறப்பு ஆய்வு நடவடிக்கைகளை தொழிலாளர் துறை மேற்கொண்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் (குழந்தைகளின் சுதந்திரமான கட்டாய கல்வி உரிமைச் சட்டம்) 2009-இன் படி, 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதைத் தடுத்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் பணியை தொழிலாளர் நலத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்.), 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து குழந்தைத் தொழிலாளர்கள் விவரங்களைச் சேகரித்து புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் 44 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், அந்தப் பட்டியலில் 2.75 லட்சம் குழந்தைத் தொழிலாளர்களுடன் தமிழகம் 10-ஆவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புள்ளி விவரம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தீவிர மறு ஆய்வு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற 12-ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான தினமாக அனுசரிக்கப்படுவதால், 8-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, திங்கள்கிழமையன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 9-ஆம் தேதி கையெழுத்து இயக்கமும், 10,11 தேதிகளில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. 12-ஆம் தேதி நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment