கல்வித் துறை அலுவலகங்களில் உள்ள கணினியில், 'பாஸ்வேர்டை' மாற்றுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக கல்வித் துறையில், 10க்கும் மேற்பட்ட இயக்குனரகங்கள் உள்ளன.
இவற்றின் கட்டுப்பாட்டில், ஆதிதிராவிட நலத்துறை, பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிக் உள்ளிட்ட பல பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக, அந்தந்த துறை சார்ந்த அலுவலகங்களில் இருந்து, சுற்றறிக்கை; அரசின் உத்தரவுகள் அனுப்பப்படும்.
சமீப காலமாக, தொடக்கக் கல்வித் துறையில் நிலவும் பல குளறுபடிகள் குறித்து, வெளிப்படையாக புகார் எழுந்துள்ளன. ஆசிரியர்கள் பற்றாக்குறை, ஓராசிரியர் பள்ளிகள், ஆங்கில ஆசிரியர் இல்லாமை, மாணவர் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட, பல பிரச்னைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள், ஒவ்வொரு நாளும், பலவித உத்தரவுகளை வழங்கி வருகின்றனர். இந்த உத்தரவுகள், உடனடியாக ஆசிரியர்கள் சங்கங்களுக்கு கிடைத்து விடுவதால், அவற்றின் மூலம், தொடக்கக் கல்வித் துறைக்கு, பல பிரச்னைகள் ஏற்படுவதாக, அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.
அரசு உதவிபெறும் பள்ளிகளில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், போலியாகச் சேர்க்கப்பட்டது குறித்து, தமிழக அரசிடம் இருந்து, கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள், அனைத்து தொடக்கக் கல்வித் துறை அலுவலகங்களிலும், கணினி பயன்பாட்டு, 'பாஸ்வேர்டை' மாற்றுமாறும், ஆசிரியர் சங்கங்களுக்கு சுற்றறிக்கை தரக் கூடாது எனவும், வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
இதன் மூலம், தொடக்கக் கல்வித் துறையின் உத்தரவுகள், இனி, ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு கிடைக்காது எனக் கருதி, அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment