2 வருடத்தில் 4 ஆட்சியர்; அதிர்ஷ்டமில்லாத அரியலூர்!
அரியலூர்: அரியலூர் மாவட்டத்திற்கு 2 வருடத்தில் 3 ஆட்சியர்கள் மாற்றப்பட்டு, தற்போது நான்காவது ஆட்சியர் பொறுப்பேற்க உள்ளது அரியலூர் மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அமைச்சர்கள் மாற்றம் அடிக்கடி நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அதேபோல் சமீபகாலமாக மாவட்ட ஆட்சியர்களின் மாற்றமும் நடந்து வருகிறது. இதில் குறிப்பாக, அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் மூன்று ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 வருடத்திற்க்கு முன்பு அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அனுஜார்ஜ், தனது அதிரடிகளால் மக்களின் செல்வாக்கை பெற்றார். அது, லோக்கல் அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சத்துணவு பணியாளர்கள் தேர்வில் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் உண்மையான பயனாளிகளுக்கு வீடு தேடி சென்று ஆணைகளை வழங்கினார். இதனாலேயே அனுஜார்ஜ் மாற்றப்பட்டு செந்தில்குமார் என்பவரை ஆட்சியராக அறிவித்தது தமிழக அரசு.
ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய அனுபவத்துடன், மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து செந்தில்குமார் பரபரப்பாக செயல்பட தொடங்கினார். அவரின் போதாதகாலம், அவரின் குடும்ப பிரச்னை பெரிதானதால், செந்தில்குமாரை தூத்துக்குடிக்கு மாற்றினார்கள்.
அதன்பிறகு, ரவிக்குமார் ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டு 5 மாதம் கூட முழுமையடையாத நிலையில், இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ரவிக்குமார் கெடுபிடி இல்லாமல் இருந்தாலும், அரியலூர் மாவட்டத்திலுள்ள ஏரி குளங்களில் மண் அள்ள அனுமதி வழங்கினார். இதனை பயன்படுத்தி ஆளும்கட்சியினர் மாவட்டத்திலுள்ள ஏரிகளில் கோடிக்கணக்கில் மணல் கொள்ளை நடத்தினர். இதுசம்பந்தமாக ரவிக்குமாரின் மேல் புகார் வரவே ரவிக்குமார் மாற்றப்பட்டுள்ளார் என்கிற தகவல் உலா வருகிறது.
இந்நிலையில் ரவிக்குமாருக்கு பதிலாக அரியலூர் மாவட்ட புதிய கலெக்டராக தமிழக பாடநூல் கழக நிர்வாக இயக்குநராக பணியாற்றிவரும் சரவணவேல் ராஜை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment