தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் மொழித்திறன் பயிற்சி அடுத்தமாதம் அளிக்கப்பட உள்ளது.
பேச்சாற்றல் இல்லை
தாய் மொழி அவசியம் தேவை தான். ஆனால் பி.இ. மற்றும் பி.ஏ., பி.காம் உள்ளிட்ட கலை அறிவியல் படிப்புகளை படித்தவர்கள் கற்ற பாடத்தை ஆங்கில மொழியில் சொல்லத்தெரிந்தால்தான் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும்.
ஆனால் பாடத்தை நன்றாக தெரிந்து வைத்திருந்தும், கற்றதை ஆங்கில மொழியில் சொல்லத்தெரியாமல். (பேச்சாற்றல் இல்லாமல்) இருக்கும் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள்.
அத்தகையவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி அளிப்பது குறித்து இந்திய ஆங்கில மொழி ஆசிரியர்கள் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கே.இளங்கோ கூறியதாவது:-
ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி
இந்திய ஆங்கிலமொழி ஆசிரியர் அமைப்பும், சென்னை வடக்கு ரோட்டரி சங்கமும் சேர்ந்து அரசு பள்ளிகளில் பணியாற்றும் 300 ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக ஆங்கிலத்தில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். மொத்தம் 5 நாட்கள் இந்த பயிற்சி அடுத்த மாதம் (ஜூன் மாதம்) அளிக்கப்படும்.
கூடிய மட்டும் அந்த ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் தான் பயிற்சி அளிக்கப்படும். கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. அவர்களுக்கு வகுப்பு எடுப்பவர்கள் ஏற்கனவே பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்தான்.
இந்த பயிற்சி நடைமுறைக்கு ஏற்புடையதாகவும், ஆங்கில மொழித்திறனை ஊக்குவிப்பதாகவும் இருக்கும். பயிற்சி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஹோலிகிராஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்புபவர்கள் 9444257308 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.
ஏராளமான மாணவர்கள் பெயில்
அண்ணா பல்கலைக்கழகம் பி.இ. படிக்கும் முதல் பருவத்தேர்வு முடிவை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் அதிர்ச்சி தரும் தகவலாக 56 என்ஜினீயரிங் கல்லூரிகளைச்சேர்ந்த அனைத்து மாணவர்களும் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை.
எனவே இப்போது ஆங்கில பயிற்சி உடனடித்தேவை என்பதால் முதல் முதலாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த பயிற்சி கொண்டு செல்லப்படும்.
அடுத்த கட்டமாக சென்னையில் பயிற்சி அளிப்பதை வீடியோ கான்பரன்சிங் மூலம் கிராமங்களில் உள்ள ஆசிரியர்களும் பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது
No comments:
Post a Comment