திருக்குறள்

09/05/2014

ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு : மாணவரை சிறப்பு இல்லத்தில் வைக்க உத்தரவு

தனியார் பள்ளி ஆசிரியை கொலை வழக்கில், கைதான, ஒன்பதாம் வகுப்பு மாணவனை, இரண்டு ஆண்டுகளுக்கு, செங்கல்பட்டு, அரசு சிறப்பு இல்லத்தில் வைக்குமாறு, இளைஞர் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, பாரிமுனையில் உள்ள, ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றியவர் உமா மகேஸ்வரி. கடந்த, 2012, பிப்.,9ம் தேதி, வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, உமா மகேஸ்வரியை, மாணவன் ஒருவன் கத்தியால் குத்தினான்; உமா மகேஸ்வரி இறந்தார். சம்பவத்தில் பிடிபட்ட மாணவனை, போலீசில் ஒப்படைத்தனர்.
புரசைவாக்கத்தில் உள்ள, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கை, சென்னையில் உள்ள, இளைஞர் நீதிக் குழுமத்தின் தலைவரான லட்சுமி ரமேஷ் தலைமையிலான, மூன்று பேர் அமர்வு, விசாரித்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாணவனை, இரண்டு ஆண்டுகளுக்கு, செங்கல்பட்டு, அரசு சிறப்பு இல்லத்தில் வைக்குமாறு, இளைஞர் நீதிக் குழுமம் நேற்று உத்தரவிட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு, அனுபவம் வாய்ந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம், உளவியல் ரீதியான உதவியை வழங்கும்; யோகா, தியானம், கவுன்சிலிங்கில், மாணவன் ஈடுபடலாம்; அவ்வப்போது, மாணவனின் பெற்றோர் சென்று, பார்த்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.

நீதிபதி அறிவுரை : தீர்ப்பு கூறப்பட்ட போது, சம்பந்தப்பட்ட மாணவன், அவனது பெற்றோரை அழைத்த நீதிபதி, மாணவனுக்கு அறிவுரை கூறினார். அப்போது, அவர் கூறியதாவது:
தற்போது விதிக்கப்பட்டுள்ள, இரண்டு ஆண்டு என்பது தண்டனை அல்ல. உன்னை மேம்படுத்திக் கொள்ள கொடுக்கப்பட்ட வாய்ப்பு. சிறப்பு இல்லத்தில், தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மன ரீதியான கவுன்சிலிங் வழங்கப்படும். அதை பயன்படுத்திக் கொண்டு நல்ல மனிதனாக வரவேண்டும்.
இவ்வாறு, நீதிபதி அறிவுரை கூறினார். தீர்ப்பளிக்கப்படும் நாள் என்பதால், மாணவனின் பெற்றோர், உமா மகேஸ்வரியின் குடும்பத்தார், அவருடன் பணியாற்றிய ஆசிரியர்கள், இளைஞர் நீதிக்குழும வளாகத்தில் குழுமியிருந்தனர். உமா மகேஸ்வரியின் தாயார் அமிர்தம் அம்மாள் கூறுகையில், "" அந்த பையன் தெரியாமல் செய்து விட்டான்; அவன் நல்லா இருக்கணும்,'' என்றார். 

உமா மகேஸ்வரியின் கணவர் ரவிசங்கர் கூறுகையில், ""மாணவன், தண்டிக்கப்பட வேண்டும் என்பது, எங்கள் விருப்பம் அல்ல. வருங்காலத்தில், இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. உமா மகேஸ்வரியின் மறைவால், எங்கள் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது,'' என்றார்.

போலீசார் கெடுபிடி : இளைஞர் நீதிக் குழும வளாகத்தில், பத்திரிகையாளர்கள் குவிந்தனர். இதில், கேமரா குழுவினரை, வளாகத்தை விட்டு வௌ?யேற்றிய போலீசார், நிருபர்களிடமும் கெடுபிடி காட்டினர்.
பின், மாணவனின் பெயர், அடையாளம் போன்றவற்றை வௌ?யிடக்கூடாது என்ற நிபந்தனையோடு, நிருபர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், செங்கல்பட்டு, அரசு சிறப்பு இல்லத்துக்கு மாணவன் அனுப்பப்பட்டான்.

No comments:

Post a Comment