திருக்குறள்

10/08/2013

200 இந்திய மொழிகள் மாயம்.இந்திய பழங்குடியின மொழிகள் அழிந்துவருகின்றன: மொழியியல் ஆய்வு நிறுவனம்

இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருநூறுக்கும் அதிகமான மொழிகள் அழிந்துவிட்டதாக மொழியியல் ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய நாடு தழுவிய மொழிகள் கணக்கெடுப்பு காட்டுகிறது.


கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 220 இந்திய மொழிகள் காணாமல் போய் இருப்பதாக வதோதராவைச் சேர்ந்த பாஷா ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1961ம் ஆண்டு இந்தியாவில் 1100 மொழிகள் இருந்துள்ளன. இதில் தற்போது 780 முதல் 880 மொழிகள் மட்டுமே உள்ளன. இந்த மொழிகளில் பெரும்பாலானவை நாடோடி இன மக்களால் பேசப்பட்டு வந்ததாகவும், அவர்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே சிதறி சென்று விட்டதால் அவர்கள் பேசி வந்த மொழிகளும் காணாமல் போய் விட்டதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளில் காணாமல்போன 220 இந்திய மொழிகள்!


இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துள்ளதாக குஜராத் மாநிலம் வதோதராவை மையமாக கொண்டு இயங்கிவரும் பாஷா ஆராய்ச்சி மற்றும் பதிப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்திய மொழிகள் குறித்து இந்த மையம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில்தான் இந்த தகவல் தெரியவந்துள்ளது. 

"2011-ம் ஆண்டிலிருந்து இந்திய மொழிகள் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் மொழிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவந்தோம். அதன்படி 1961 ஆம் ஆண்டில் 1100 மொழிகள் இந்தியாவில் இருந்தன. தற்போது 220 மொழிகள் வழக்கொழிந்து விட்டன" என்கிறார் எழுத்தாளர் மற்றும் கணக்கெடுப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தேவி. 

"நாங்கள் 780 மொழிகளை கண்டுபிடித்தோம். கண்டிப்பாக 100க்கும் மேற்பட்ட மொழிகள் கணக்கில் வராமல் உள்ளன. அதையும் சேர்த்தால் 880 மொழிகள் மட்டுமே இருக்கிறது. மற்ற மொழிகள் எங்கே போனதென்றே தெரியவில்லை. மொழிக்கு இது ஒரு துயரமான இழப்பு. நம் நாட்டில் பெரும்பான்மையான மொழிகள் நாடோடி சமூகங்கள் பேசிக்கொண்டிருந்தவை. அவர்கள் நாடு முழுவதும் பரவியதால் அவர்கள் பேசிக் கொண்டிருந்த மொழிகள் இல்லாமல் போய்விட்டன. இந்திய மக்கள் தொகையில் 5 கோடி பேர் நாடோடி சமூகங்களாக உள்ளனர்" என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார். 

மொழிகளுக்கு அங்கீகாரம் இல்லாமை, சமூகங்களின் இடம்பெயர்வு, செல்லும் இடத்தில் வாழ்வாதாரம் சார்ந்த மொழிகளை பேசுவது போன்ற காரணங்களால் மொழிகள் அழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. மொழிகள் பாதுகாப்பு கொள்கையை முறையாக அரசு நடைமுறையில் செயல்படுத்தாததே இதற்குக் காரணம்" என்று கூறுகிறார்.

1961 ஆம் ஆண்டில் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 1652 மொழிகள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்பட்டு வந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அது படிப்படியாக குறைந்து 1100 மொழிகளாக வழக்கில் இருந்துள்ளன.

1971 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 108 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டு ஆவணமாக்கப்பட்டது. 10 ஆயிரம் பேர் பேசும் மொழிகள் மற்ற பிரிவுகளில் சேர்க்கப்பட்டன. இந்திய மொழிகள் கணக்கெடுப்பு நிறுவனம், அரசின் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. மொத்தமாக மொழிகளை பட்டியலில் சேர்க்கின்ற வேலையை மட்டும் செய்துள்ளது. அதனால் பெரும்பான்மையான மொழிகள் கணக்கில் வராமல் போய்விட்டது என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment