திருக்குறள்

10/08/2013

10-ஆம், 12-ஆம் வகுப்புகளின் பள்ளி சான்றிதழ்களில் முறைகேடு ஆசிரியர்களின் மோசடி உறுதியானால் ஊதியம் திரும்பப் பெறப்படும்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்கள் பலர் சான்றிதழ்களை போலியாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஆசிரியர்களின் மோசடி உறுதி செய்யப்பட்டால் அவர்களின் ஊதியம் திரும்பப் பெறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 1995-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரையில் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த காலகட்டத்தில் சேர்ந்த பலர் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்துள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பு புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் இந்தப் புகார் மீண்டும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மட்டுமல்லாமல் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு சான்றிதழ்களையும் சிலர் போலியாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: இந்த மோசடி குறித்து மாநகராட்சி சார்பில் விசாரணை நடக்கிறது. ஏராளமான ஆசிரியர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
குறிப்பிட்ட காலக் கட்டத்தில் பணியில் சேர்ந்த பல ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. மேலும் பல ஆசிரியர்கள் தங்களது சான்றிதழ்களை ஒப்படைக்க மறுத்தனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து சான்றிதழ்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
சில ஆசிரியர்கள் 10-ஆம், 12-ஆம் வகுப்புகளின் சான்றிதழ்களையும் போலியாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இப்போது ஆசிரியர்களின் அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தால், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் இதுவரை பணியின்போது பெற்ற ஊதியத்தையும் திருப்பி வழங்க வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment