திருக்குறள்

09/08/2013

குழந்தைகளுக்கு தனி அமைச்சகம் அவசியம் தேவை!


உலகத்தில் நடக்கும் எந்த ஒரு அசம்பாவிதத்திலும் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.இயற்கைச் சீற்றங்கள், போபால் விஷவாயு, சுனாமி போன்ற ஆபத்துக்காலங்களில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். வீட்டுக்குள் பிரச்சனை, கணவன் மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து போனாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். 

குழந்தைகள் பூக்களைப் போன்றவர்கள். அவர்களை மென்மையாகக் கையாள வேண்டும் என்று சொல்லப்படுவது வெறும் பேச்சோடு நின்று விடுகிறது. ஏதோ ஒரு விதத்தில் குழந்தைகள் மீது உரிமை மீறல்களும், வன்கொடுமைகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

11 வன்கொடுமைகள் 

அந்த வகையில் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் பட்டியலில் 1)வகுப்பறை வன்முறை,2)பாலியல் வன்முறை, 3)குழந்தைத் தொழிலாளர்களாக்குதல், 4)குழந்தைத் திருட்டு,5)குழந்தைகள் கடத்தல்,6)சூதாடவைத்தல், பிச்சையெடுக்கவைத்தல்,7)தத்தெடுத்தல்,8) குழந்தைத் திருமணம், 9)பொட்டு கட்டுதல், பூப்பெய்தல் சடங்குகள், 10)குழந்தைகளைத் திருடுதல் 
11)பெண்சிசுக்கொலை ஆகியவை முக்கியமாக இடம்பெற்றுள்ளன. 


இந்த நிலையில், பள்ளிகளில் குழந்தைகளுக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன என்று கல்வியாளர் ஆயிஷா நடராஜனிடம் கேட்டோம்.

‘‘குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகளை பெரியவங்களா இருந்து தீர்மானிக்குறோமே ஒழிய குழந்தைகள் மனநிலையைப் புரிந்துகொள்வதில்லை. அமெரிக்க அறிஞர் ஜான் ஹோல்ட், போர்ச்சுகீசிய அறிஞர் ஃபாலோ பிளேயரே எனும் இரு அறிஞர்களும் குழந்தைகள் உரிமைகள் குறித்து விரிவாகப்பேசியுள்ளனர். 

2010 ல் வந்த கல்வி உரிமைச் சட்டப்படி குழந்தையை நோக்கி,'முட்டாள், பூட்டகேஸ்!' என்றெல்லாம் ஆசிரியர் திட்டக்கூடாது. அப்பா, அம்மாவின் தொழில் குறித்து பேசி இழிவுபடுத்தக்கூடாது. ஃபீஸ் கட்டவில்லை என குழந்தையிடம் கேட்பது, வகுப்புக்கு வெளியே அனுப்புவது, தேர்வு எழுதத்தடை விதிப்பது கூடவே கூடாது. எட்டாம் வகுப்பு வரை குழந்தையை ஃபெயிலாக்கக்கூடாது என்றால், ஃபெயிலாக்காத அளவுக்கு குழந்தையை படிப்பில் முன்னேற்ற வேண்டும் என்று அர்த்தம். அதைவிட்டுவிட்டு கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல. 

மாணவர்களை தரம் பிரிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு இல்லை


ரெக்கார்டில் மட்டும் சாதி இருக்கணும். வகுப்பறையில் யார் நீ? என்று கேட்கக்கூடாது. ரெக்கார்டில் இருப்பதைப் பார்த்து வேண்டுமானால் குழந்தைகளுக்கு சலுகைகள் பெற்றுத்தர ஆசிரியர் உதவ வேண்டும். அப்படி ஆசிரியர் உதவாமல் இருப்பதும் குற்றம். சாதி மதம் பார்த்து இனம் கண்டு வேற்றுமைப்படுத்துவதும் தவறு. அறிவாளி, முட்டாள் என்று மாணவர்களை தரம் பிரிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு இல்லை. குழந்தை பள்ளியிலிருந்து வீட்டுக்கோ அல்லது வீட்டிலிருந்து பள்ளிக்கோ செல்லும் வழியில், காணாமல் போனாலோ பள்ளியில் இருக்கும்போது காணாமல்போனாலோ ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு உண்டு. குறிப்பாக பெண்குழந்தைகளுக்கும் இந்த கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது.

முன்பெல்லாம் பள்ளிக்கு ஒரு மாதம் வராத குழந்தைகள் பெயர்களை வருகைப் பதிவேட்டிலிருந்து எடுத்துவிடுவர். இப்போது பத்துநாள் வரவில்லையென்றாலே குழந்தைகள் வீட்டிற்குப்போய் ஆசிரியர்கள் விளக்கம் கேட்கவேண்டும். இப்போதும், சொத்தும் லாபமும் சேரும் என்று அட்சயதிருதியை நாட்களில் மலைவாழ், கிராமப்புற, சேட்டு குழந்தைகளுக்கு திருமணம் செய்துவிடுகின்றனர். அந்தத் திருமணம் செல்லுபடியாகாது. அதைத் தட்டிக்கேட்க தலைமை ஆசிரியருக்கும், மற்ற ஆசிரியர்களுக்கும் உரிமை உண்டு. 

'ஆசிரியர் அடித்தார்; கட்டாயப்படுத்தினார்; தகாத வார்த்தைகளைக் கூறினார்...!'என்று சொன்னால் கல்வி உரிமைச் சட்டப்படி முறையிடலாம். இதனால் உண்மை நிரூபணமாகி ஆசிரியர் மேல் தவறு இருப்பது தெரியவந்தால் தண்டனை கிடைக்கும்.

48 மணி நேரத்தில் விசாரணை

தன் கடமையில் இருந்து மீறுவது,மன உளைச்சலை ஏற்படுத்துவது, அத்துமீறுவது என ஆசிரியர் செயல்பட்டால் 17(ஆ) சட்டப்படி ஆசிரியரை சஸ்பெண்ட் அல்லது பணிநீக்கம் செய்யலாம். சட்டத்தில் இவ்வளவு இடம் இருந்தாலும் குழந்தைகளைக் கண்காணிக்கவும், பாதுகாக்கவும் சமூக ஆர்வலர்கள் தேவை. இல்லையென்றால் சட்டங்கள் வெறும் பேப்பர்களிலேயே இருக்கும்.

தவறுகளை மாவட்ட கல்வி அதிகாரி, கூடுதல் கல்வி அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் போன்றவர்களிடம் சொல்லலாம். மெட்ரிக் பள்ளி என்றால் மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மாவட்ட மெட்ரிக் பள்ளி உதவி ஆய்வாளரிடம் புகார்கள் தெரிவிக்கலாம். இந்த அதிகாரிகள் எண்களை பள்ளியில் எழுதிவைத்து இருக்கவேண்டும். புகார்கள் கூறினால் தொடர்புடைய அதிகாரிகள் 48 மணி நேரத்தில் விசாரணை செய்ய வேண்டும் ’’ என்றார். 

வீட்டைச் சுற்றிலும் குழந்தைகள் மீது வெடிக்கும் வன்முறை பலரின் உயிர்களைப் பறித்துள்ளன. கொடுங்கையூரில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் ஆணும் பெண்ணும் தப்புசெய்தனர். இதை பார்த்த பார்த்த குழந்தையை இருவரும் சேர்ந்து கொன்றனர்.

தாம்பரம் பக்கத்தில் வீட்டு பொதுசுவர் கட்டும் பிரச்னையில் பக்கத்துவீட்டுக்காரருடன் தகராறு ஏற்பட்டது. இதை மனதில்வைத்து பக்கத்து வீட்டுக்காரர் ஏழு வயது, ஐந்து வயதுள்ள இரு குழந்தைகளைக் கொன்றார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்துக்கு அருகில் உள்ள கத்தரிபுலத்தில் வேன் கவிழ்ந்து 11குழந்தைகளோடு ஆசிரியரும் இறந்தார்.அதற்குப்பிறகுதான் பள்ளிக்கு அங்கீகாரம் இல்லை. வேனுக்கு ஆர்.சி.புக், பதிவு இல்லை எனத் தெரிய வந்தது.


கும்பகோணம் தீவிபத்துக்குப் பிறகு, சம்பத் கமிஷன் அறிக்கை பள்ளிகளுக்கான கட்டிட விதிமுறைகளைநிர்ணயித்தது. கட்டிடங்கள் சரியாக இல்லாத, அங்கீகாரம் இல்லாத எததனை பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று பார்த்தால் பதிலே இல்லை. இதற்கெல்லாம் காரணம் கொண்டுவந்த திட்டங்களை செயல்படாமல் இருப்பதுதான். 

தீர்வுகள்

2007 - 12ல் குழந்தைகள் ஒருங்கிணைந்த பாதுக்காப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை. நிராகரிக்கப்பட்டவர்கள், தெருவோரக்குழந்தைகள், அனாதைகள் போன்றவர்களைப் பாதுக்காக்க குழந்தைப் பாதுகாப்புக் குழு மாவட்ட அளவில் ஏற்படுத்தவேண்டும் என சொல்லப்பட்டது. இன்னும் அது முழுமையாக இல்லை. 

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் குற்றவாளியாகக் கருதக்கூடாது. சட்டத்துக்கு முரணான செயல் செய்தவர் என்றே சொல்லவேண்டும். இவர்களை கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரிக்கக்கூடாது. இளம் சிறார் நீதிமன்றத்தில் விசாரணை செய்யலாம். அதுவும் பெயர், பதவி, கோட், வக்கீல் கவுன் என்ற அடையாளங்கள் இல்லாமல் நண்பனைப்போல இயல்பான முறையில் விசாரிக்கவேண்டும்.விவாதமே இருக்கக்கூடாது. தவறு செய்தவரின் குடும்பம், பள்ளி சூழல் சார்ந்து தீர்ப்பு இருக்கவேண்டும். இதை இளம் சிறார் நீதிமன்றச் சட்டம் 2002 சொல்கிறது. இளம் சிறார் நீதிகுழுமத்தில் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்கள் மூவர் இருப்பர். இதில் நடுவர் இருவர், உறுப்பினர்கள் இருவர். ஆனால் திருவொற்றியூர் பள்ளி மாணவன் செய்த கொலை வழக்கு கிரிமினல் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட்து. 

மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம்

குழந்தைகள் மீது சட்டத்துக்கு முரணான தவறு செய்தவர்கள் என்ற வழக்கு இருந்தால் நான்கு மாதத்துக்குள் முடிக்கவேண்டும்.ஆனால் இரண்டு வருடங்கள் முடிந்தும் வழக்கு முடியாத நிலையில் 70 முறை அலைக்கழிக்கப்பட்ட குழந்தைகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தேவை என மத்திய அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் இன்னமும் உருவாக்கப்படாததுதான் தமிழகத்தின் துரதிர்ஷ்டம். இந்த ஆணையம் தான் குழந்தைகள் உரிமை மீறலை விசாரிக்கும்.

குழந்தைகளுக்காக கிராம அளவில் கண்காணிப்புக்குழு 2000 ல் ஏற்படுத்தப்பட்டது, பஞ்சாயத்துத்தலைவர், ஆசிரியர், செவிலியர் உள்ளிட்டவர்கள் குழுவை வழிநடத்துவார்கள். மாதம்தோறும் நடத்தும் ஆரிக்கையை குழு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பவேண்டும். மாவட்ட ஆட்சியர் மாநில அதிகாரிக்கு இரண்டு முறை அனுப்புவார். ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதற்கு எதிரானஅமைப்பு மாவட்ட மாநில அளவில் இருக்கு. ஆனால் அது செயல்படவில்லை. 

குழந்தைகளுக்கு தனி அமைச்சகம்

'ஸ்லம்லஸ் சென்னை, விஷன் 2020' என்று கவர்ச்சிகரமான திட்டங்களைச் சொல்லி மக்களை அப்புறப்படுத்தும்போது, குழந்தைகள் படிப்பதை நிறுத்திவிட்டு தொழிலாளர்களாகின்றனர். தமிழகம் இப்போது 48% நகரமயமானதாக உள்ளது. இப்போது விவசாய பூமி என்று சொல்லப்படுவது முடியாது.

நெல் விளையும் பூமியை பிளாட் போட்டு விற்பதால் சென்னை, திருப்பூர், பெங்களூர் என திசையெங்கும் செல்பவர்கள் குழந்தைகளோடு அல்லல்படுகிறார்கள். பிழைப்புக்காக குழந்தைகளும் வேலைசெய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கர்நாடகா, கேரளாவில் விவசாய நிலங்களை விற்க முடியாது. பட்டா போட முடியாது என்று சட்டம் இருக்கிறது. தமிழகத்திலும் அந்த நிலை வரலாமே! 

மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தில் அரசியல் கட்சி சார்பற்றவர்கள், குழந்தை உரிமை மீது அக்கறை உள்ளவர்கள் மட்டுமே பொறுப்பில் இருக்கவேண்டும். பக்கத்து மாநிலங்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தனி அமைச்சகம் இருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் அது சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படுகிறது. குழந்தைகளுக்கு தனி அமைச்சகம் தமிழ்நாட்டின் அவசியத்தேவை. குழந்தைகள் நலனுக்கு தனி நிதி ஒதுக்கீடு தேவை. இவையெல்லாம் முழுவீச்சுடன் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.’’ இவற்றை முழுமையாக செய்தால் எந்த குழந்தையும் பாதிக்கப்படாது.

No comments:

Post a Comment