திருக்குறள்

09/08/2013

ஆதார் அட்டை கட்டாயமில்லை: மத்திய அரசு அறிவிப்பு



அரசின் சேவைகளை பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை என்றும் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை பெற வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணையும் குறிப்பிட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் திட்டமிடல் துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், வங்கிகளில் கணக்குகள் தொடங்குவது, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, பாஸ்போர்ட் பெறுதல் உள்ளிட்ட சேவைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை என்றார்.

பயனாளிகளின் பகுதிகளில் நேரடி மானியத் திட்டம் தொடங்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் ஆதார் எண்ணை பெற வேண்டும் என்றும் அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

நேரடி மானியத் திட்டம் நாட்டில் தற்போது 20 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது என்றும், இந்த திட்டத்தை பிற பகுதிகளிலும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தாண்டு ஜூலை 26ஆம் தேதி வரை ஆதார் அட்டை பெற 39.36 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவித்த அமைச்சர் சுக்லா, ஏற்கனவே பதிவுசெய்த 42.65 கோடி பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்கான செயல்முறை நடைபெற்று வருகிறது என்றார்.

ஆதார் அடையாள அட்டைக்காக, தனிநபர்கள் பற்றிய புள்ளி விவரங்களை தனியார் நிறுவனம் சேகரித்து வருகிறது என்றும், இந்த விவரங்களை அந்த நிறுவனம் தவறாகப் பயன்படுத்தாது என்று உறுதியளிக்கிறேன் என்றும் அமைச்சர் சுக்லா கூறினார்.

No comments:

Post a Comment