சுதந்திர தினத்தன்று பள்ளிகளுக்கு, "டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு, "கிடுக்கிப்பிடி' போடப்பட்டு உள்ளது. தனிவருகைப் பதிவேட்டில் பதிவு செய்யவும், வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பள்ளிகளில், ஆக., 15ம் தேதியன்று, சுதந்திர தினம் கொண்டாடப்பட வேண்டும். அன்று பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து, கொடி ஏற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான கிராமப்புற பள்ளிகளில், பள்ளிக்கு எந்த ஆசிரியர்களும் வருவது கிடையாது. பள்ளியில் உள்ள வாட்ச்மேன்கள், பள்ளிகளில் கொடி ஏற்றி விடுகின்றனர். பல பள்ளிகளில், தலைமையாசிரியர் மட்டும் வருகை தந்து கொடி ஏற்றிச் செல்வார். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறைக்கு புகார்கள் சென்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளதாவது: சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் குறித்து, தனி வருகைப் பதிவேட்டில், பதிவு செய்ய வேண்டும். பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் குறித்து, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, தெரியப்படுத்த வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். பள்ளிக்கு வராத ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும். சரியான விளக்கம் அளிக்காதவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று, பள்ளிகளில், மாணவர்களுக்குக் கட்டுரை, ஓவியம், கவிதை, விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும். போட்டிகள் நடத்தப்பட்ட விவரத்தை, போட்டோவுடன், முதன்மைக் கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment