தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:எல்லா மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, தனியாக தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில்
தொடர்பு கொண்டு, தேர்தல் தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்கலாம். சென்னையில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 300 புகார்கள் வருகின்றன. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மக்களவை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை அல்லது பூத் சிலிப் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பூத் சிலிப் வழங்கலாம்.
ஆனால், அது இரு பிரிவாக இருக்கவேண்டும். ஒரு பிரிவில் வாக்காளர் பெயர் மற்றும் அடையாள அட்டை எண் இருக்க வேண்டும். மற்றொரு பிரிவில் கட்சியின் சின்னம், பெயர் இருக்கலாம். ஆனால் வாக்களிக்க வரும்போது கட்சி சின்னம் உள்ள பிரிவை எடுத்து வரக்கூடாது.அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைய தளம் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது. இதுபற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியது. அதற்கு அதிமுக தரப்பில் இருந்து விளக்கம் அளித்துள்ளனர். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சி சார்பில் உள்ள இணையதளம் மூலம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை இல்லை. ஆனால், எலக்ட்ரானிக் மீடியா மூலம் கட்சியினர் பிரசாரம் செய்வதற்கு அனுமதி பெற வேண்டும்.அரசு பணத்தில் கட்டப்பட்டுள்ளதால், எம்எல்ஏ அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு கட்டிடத்தில் செயல்படும் எந்த அலுவலகத்தையும் கட்சிகளின் தேர்தல் பணிக்கு அனுமதிக்க முடியாது. மேயர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அலுவலகத்துக்கு வந்து பணி செய்யலாம். ஆனால், அங்கு மக்களை சந்திக்க அனுமதி கிடையாது. வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் பெறாமல் இருக்க பிரசாரம் செய்து வருகிறோம். மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலமும் தேர்தல் விழிப்புணர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் பண பரிமாற்றங்களை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவர், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பணம் எடுத்தாலே அவரது பெயரை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். எனவே, ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான பண பரிமாற்றங்களை தெரிவிக்க வேண்டுமென வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கியில் நடைபெறும் தினசரி பரிவர்த்தனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெரிய துணிக்கடைகள், பாத்திர கடைகளில் நடைபெறும் மொத்த விற்பனையும் கண்காணிக்கப்படும்.அதிமுகவின் தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் திமுகவின் தேர்தல் அறிக்கையும் அனுப்பி வைக்கப்படும்.
செலவின பார்வையாளர்கள் வரும் 29ம் தேதி வருவார்கள். பொது பார்வையாளர்கள் ஏப்ரல் 5ம் தேதிக்கு பிறகு வருவார்கள்.வாகன சோதனைகள், வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் 29ம் தேதிக்கு பிறகு அதிகரிக்கப்படும். வாகன தணிக்கை குழுவினருக்கு உதவி செய்ய 32 கம்பெனி மத்திய அரசு மற்றும் வெளி மாநில போலீசார் வரவழைக்கப்படுவார்கள். கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்புதான் கொடி கட்டவேண்டும். பிரசார மேடையில் இருந்து 100 மீட்டர் வரைதான் கட்சி கொடி, தோரணம் கட்ட வேண்டும். கூட்டம் முடிந்த ஐந்து மணி நேரத்தில் கொடி, மேடையை அகற்றிட வேண்டும். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
ரூ.2.16 கோடி பறிமுதல்:
வியாபாரிகள் உள்பட யாராக இருந்தாலும் பணம் கொண்டு செல்லும்போது கட்டாயம் அதற்கான ஆவணம் வைத்திருக்க வேண்டும். ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும். இது வரை தமிழகம் முழுவதும் 2கோடியே 16 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 500 மிக்சிகள், 6.6 கிலோ வெள்ளி பொருட்கள், 7 கிலோ தங்கம் மற்றும் 73 பட்டுப்புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பிரவீன்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment