திருக்குறள்

31/03/2014

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உயிர் இழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் நிவாரண தொகை: தேர்தல் ஆணையம்

லோக்சபா தேர்தல் வாக்குபதிவின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களில் அரசு ஊழியர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் 9 கட்டமாக நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு பணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓடிசா, சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் நக்சல் தொல்லை உள்ளது. அங்கு தேர்தல் நடத்துவது பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. தமிழகத்திலும் இதற்கு சவால் விடும் வகையில் அரசியல் கட்சி தொண்டர்களின் வாக்கு பதிவு இயந்திரம் உடைப்பு, வாக்கு பதிவு இயந்திரத்தை தூக்கி செல்வது உள்ளிட்ட செயல்களில் திடீரென ஈடுபடுவது உண்டு. அந்த சமயங்களில் தடுக்க முயலும் அரசு ஊழியர்களை அவர்கள் தாக்குவதும் உண்டு. இந்த மாதிரி சம்பவங்களில் அரசு ஊழியர்கள் ஊனமானாலோ, இறந்தாலோ தேர்தல் கமிஷன் என்ன நிவாரணம் வழங்கியது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது அப்படி இறக்க நேரிட்டால் அவர்களுக்கு இரட்டை நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் சுனித் முகர்ஜி அனுப்பியுள்ள சுற்றரிக்கையில், கூறியுள்ளதாவது: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிர்பாராதவிதமாக உயிர் இழப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். அதே நேரத்தில் தேர்தல் சமயத்தில் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் மூலம் குண்டு வெடிப்பு, ஆயுத தாக்குதல் போன்றவற்றால் ஊழியர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் உறுப்பு பாதிப்பு, பார்வை இழப்பு போன்றவை ஏற்பட்டால் ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment