குழந்தைகளின் பணி, கல்வி கற்பது மட்டும் தான். கட்டாயத்தின் காரணமாக சிலர் குழந்தையிலேயே தொழிலாளர் ஆகின்றனர். குழந்தைகளின் வருமானம் நாட்டின் அவமானம். வளர்ச்சியை விரும்பும் நாடுகள், முதலில் ஒழிக்க வேண்டியது, குழந்தை தொழிலாளர் முறையைத் தான்.
உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் 25 கோடி குழந்தை தொழிலாளர் உள்ளனர், இதில் 10 கோடி பேர், பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என 'யுனிசெப்' நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை அறவே ஒழிக்க வேண்டும் என, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,) இலக்கு நிர்ணயித்துள்ளது. மையக்கருத்து:
இந்த ஆண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தின் மையக்கருத்துகள்.
* சர்வதேச தொழிலாளர் அமைப்பு பரிந்துரைத்த, சமூக பாதுகாப்பு விதி எண்.202யை செயல்படுத்துதல்.
* தேசிய சமூக பாதுகாப்பு அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கு உதவுதல்; குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல்.
* பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து, அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல்.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், பணிக்கு சென்றால் அவர்கள் குழந்தை தொழிலாளர்கள். பள்ளி முடித்தவுடன் சில குழந்தைகள் பகுதி நேரமாக வேலைக்குச் செல்கின்றனர். சிலர் பெற்றோருக்கு உதவியாக இருக்கின்றனர். இவர்கள் குழந்தை தொழிலாளர்களாக கருதப்பட மாட்டார்கள். சர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி, கடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், இலகுவான வேலைகளை பார்க்கலாம். அதே நேரம் கல்வி, சுகாதாரம், மனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது.
இந்தியாவின் நிலை:
இந்தியாவில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகம். விவசாயம், தீப்பெட்டி, செங்கல் சூளை, டெக்ஸ்டைல் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் விடுமுறையின்றி, ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலைபார்க்கின்றனர். கொத்தடிமைகளாகவும் குழந்தைகள் இருக்கின்றனர்.இந்தியாவில் அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தை முழு அளவில் நிறைவேற்றினால் அதிகளவிலான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வர். பெரும்பாலான குழந்தைகள், குடும்ப சூழ்நிலை காரணமாகத் தான், பணிக்கு அனுப்பப்படுகின்றனர். பெற்றோரின் நிரந்தர வருமானத்துக்கு அரசு வழிவகுத்தால், அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவர். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கலாம்.
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.2014-உறுதிமொழி-
No comments:
Post a Comment