திருக்குறள்

07/09/2013

பட்டதாரி ஆசிரியர்கள் உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதியம் பெற்றாலும் கூட எம்.பில் படிப்புக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தர

பட்டதாரி ஆசிரியர்கள் உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதியம் பெற்றாலும் கூட எம்.பில் படிப்புக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள்

மதுரை சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் நாகசுப்பிரமணியன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

நான் எம்.எஸ்சி, எம்.எட் முடித்துள்ளேன். உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதிய உயர்வு பெற்று வருகிறேன். இந்த நிலையில் 1988-ம் ஆண்டு எம்.பில் முடித்து விட்டேன். இதற்காக தனியாக ஊக்க ஊதியம் அளிக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் மதுரை மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் கொடுத்தேன். ஆனால், எனது விண்ணப்பத்தை 25.11.2010 அன்று கல்வி அதிகாரி நிராகரித்தார்.

ரத்து செய்ய வேண்டும்

உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதியம் பெற்று வந்த பட்டதாரி ஆசிரியரான காசிமணி உள்ளிட்ட சிலருக்கு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் எம்.பில் படிப்புக்காக தனியாக ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.

எனவே, எனக்கு எம்.பில் படிப்புக்காக தனியாக ஊக்க ஊதியம் தர முடியாது என்ற கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து விட்டு எம்.பில் படிப்புக்காக எனக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அரசாணை

இதே போன்று சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பாலஅய்யப்பன், சுந்தரராஜபாண்டியன், பி.எம்.ஸ்ரீனிவாசன், வி.வி.சுந்தரமூர்த்தி ஆகியோரும் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் அருள்வடிவேல் சேகர் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:-

உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதியம் பெற்று வரும் பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் எம்.பில் படிப்புக்காக தனியாக ஊக்க ஊதியம் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்க ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் தனியாக ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.

கோர்ட்டு நேரம் வீணாகிறது

பொதுவாக ஒரு உத்தரவு பிறப்பிக்கும் போது வழக்கு தொடர்ந்த நபருக்கு மட்டும் தான் அது பொருந்தும் என்று அதிகாரிகள் கருதுவது தவறானது. ஒவ்வொருவரையும் கோர்ட்டுக்கு சென்று உத்தரவு பெற்று வரும் படி கூறுவதும் சரியல்ல.

தேவையில்லாமல் கோர்ட்டுக்கு செல்லும்படி கூறுவதால் தேவையில்லாமல் கோர்ட்டு நேரமும் வீணாகிறது. எனவே, ஏற்கனவே உள்ள அரசாணைப்படி மனுதாரர்களுக்கும் எம்.பில் படிப்புக்காக 4 வாரத்துக்குள் தனியாக ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment