திருக்குறள்

07/09/2013

355 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி வழங்கினார் கல்வியறிவு பெற்ற ஆண்-பெண் வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுகோள்

ஆசிரியர் தினமான  செப்-5 நாடு முழுவதும் உள்ள 355 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். அப்போது அவர், கல்வியறிவு பெற்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே எண்ணிக்கையில் இருக்கும் வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


355 ஆசிரியர்களுக்கு விருது

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான நேற்று நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லாசிரியர்களுக்கு விருதினை வழங்கினார்.177 தொடக்க பள்ளி ஆசிரியர்கள், 140 இடைநிலை ஆசிரியர்கள் உள்பட 355 பேருக்கு இந்த விருதினை அவர் வழங்கினார். சான்றிதழ், வெள்ளி பதக்கம், ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பெண்களுக்கு மறுப்பதா?

விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது;-

கல்வி அறிவு பெற்ற ஆண், பெண்கள் இடையே எண்ணிக்கையில் உள்ள வித்தியாசத்தை ஒழிப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு செயலாற்றி, நமது வளர்ச்சி இலக்கை அடைய வேண்டும். பெண் குழந்தைகள் என்பதாலேயே அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதைவிட வருத்தமளிக்கும் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

‘அனைத்தும் அறிவுக்காகத் தான், அனைவரும் அறிவு பெற வேண்டும்’ என்ற பொன்மொழியை நான் இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

கல்வி பாடத்திட்டங்களை தரமாக்குவதற்கான தேவை அதிகம் உள்ளது பற்றிய விழிப்புணர்வு அனைத்து ஆசிரியர் சமுதாயத்திடம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். கற்கும் மற்றும் கற்பிக்கும் முறைகளில் தகுந்த, வலிமையான அணுகுமுறைகளை ஏற்படுத்த நவீன கல்விமுறைகளை சேர்ப்பது அவசியம். கல்வியின் தரத்தை மேம்படுத்த புதிய திட்டங்களை உருவாக்குவதும் நமக்கு அவசியமாக இருக்கிறது. இதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம். அனைவரும் இணைந்து ஒரு நல்ல பலனை காண உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

சென்னை ஆசிரியைகள்

சென்னையை சேர்ந்த சி.பி.எஸ்.இ. ஆசிரியைகள் ஆர்.சி.செல்வராணி, கீதா பாலசந்தர், கன்யா ஸ்ரீதர், கீதா நந்தகுமார், ஓசூர் வசந்தி தியாகராஜன் ஆகியோரும் ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர்.

370 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது: 
உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன்
வழங்கினார்.

பள்ளி கல்வித்துறை சார்பில், நேற்று நடந்த ஆசிரியர் தின விழாவில், 370 ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருதுகளை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.

சென்னை, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், நேற்று மாலை விழா நடந்தது. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா, தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வரவேற்றார். பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட, 370 ஆசிரியர்களுக்கு, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். 5,000 ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் வெள்ளி பதக்கம் ஆகியவற்றை, அமைச்சர் வழங்கினார்.

அமைச்சர் பேசுகையில், "கடந்த, இரு ஆண்டுகளில், 63 ஆயிரம் ஆசிரியர் நியமனம் அறிவிக்கப்பட்டு, இதுவரை, 51 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையை முன்னேற்ற, முதல்வர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்" என்றார்.

சபிதா பேசுகையில், "அரசுப் பள்ளிகளில், ஆங்கில ழி கல்வி துவங்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டை விட, ஒரு லட்சம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவியர் நலனுக்காக, 14 வகையான நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது" என்றார்.

சென்னை மாவட்ட கலெக்டர், சுந்தரவல்லி, தேசிய ஆசிரியர் நல நிதிக்காக, மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அமைச்சரிடம் வழங்கினார். விழாவில், எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, பாடநூல்கழக நிர்வாக இயக்குனர், மகேஸ்வரன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


போலீஸ் ஸ்டேஷன் போனால் தான் நல்லாசிரியர் விருது கிடைக்குமா: ஆசிரியர்கள் ஆதங்கம்


மாநில நல்லாசிரியர் விருது பெற, போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும் என்ற கல்வித் துறையின் புதிய முடிவு, வேதனையாக உள்ளது என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, செப்.,5ம் தேதி நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு, மாநிலத்தில் 370 ஆசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெற குறைந்தது 20 ஆண்டுகள் வரை எவ்வித புகாருக்கும் ஆளாகாமல் பணியாற்றியிருக்க வேண்டும்.

மாணவர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கான செல்பாடுகளில் ஆசிரியர்கள் பங்கு வகித்திருக்க வேண்டும். இதையெல்லாம் விட, அரசியல் பின்னணி இருக்க கூடாது போன்ற தகுதிகள் விருது பெற பரிசீலிக்கப்படும். இந்தாண்டு, இந்த விருது பெற விண்ணப்பித்த ஆசிரியர்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், ஐவர் கமிட்டி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கே சென்று அந்த ஆசிரியர்கள் குறித்து விசாரித்து, விருதுக்கு தகுதியானவர்களை சிபாரிசு செய்தது.

இதன்பின் பலகட்ட நடவடிக்கைக்கு பின் தான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இந்தாண்டு புதிய முடிவாக, விருதுக்கு தேர்வான ஆசிரியர், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில், "தங்கள் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை" என்று சான்றிதழ் பெற்று வரவேண்டும் என, வாய்மொழி உத்தரவு போடப்பட்டது.

இதனால், விருது கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல், ஆசிரியர்கள் போலீஸ் ஸ்டேஷன் அலையவேண்டியிருந்தது. பலர் அதுபோன்ற சான்றிதழ் பெற முடியாமல் தவித்து, ஒரு வழியாக அந்த சான்றிதழை பெற்ற பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இருபது ஆண்டுகளுக்குமேல் கல்வி கற்பித்து அனுபவம் உள்ள ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் தான் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது அறிவிக்கப்பட்ட பின் அவர்களை போலீஸ் ஸ்டேஷன் சென்று சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்று கூறுவது கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த உத்தரவை கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக வாபஸ் பெறவேண்டும், என்றனர்.

இந்தாண்டு, நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்வதில் அரசியல் தலையீடு அதிகம் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. சிபாரிசு செய்யப்பட்ட பல ஆசிரியர்கள் மீது குற்ற வழக்குகள், பாலியல் வழக்குகள் இருந்துள்ளன. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தாங்கள் தப்பிக்கவே, போலீஸ் சான்றிதழ் பெற்று வரவேண்டும் என்று கடைசி நேரத்தில் வாய்மொழியாக உத்தரவிட்டனர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment