ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எளிமையான பரிசோதனைகள் மூலமாக அறிவியலைக் கற்பிப்பதற்காக 80 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இந்தப் பயிற்சியில் தங்களது சுற்றுப்புறங்களில் கிடைக்கும் எளிய பொருள்களைக் கொண்டு எவ்வாறு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வது என ஆசிரியர்கள் அறிந்துகொள்வார்கள் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.அனைவருக்கும் கல்வித் திட்டத்துடன் இணைந்து வரும் அக்டோபர் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என அவர் மேலும் கூறினார்.குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக மாநில அளவில் 240 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவனத்தில இந்தப் பயிற்சி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடங்களில் பல்வேறு எளிய பரிசோதனைகள் ஆசிரியர்களுக்கு இதில் கற்றுத்தரப்படுகின்றன. எளிய மின்காந்தத்தை உருவாக்குதல்,முழு அக எதிரொளிப்பு, வேதியியல் நாள் காட்டி, நிறப் பரிசோதனைகள், மூட்டுகளின் இயக்கம், ரப்பர் எலும்பு, நொதித்தல் சோதனை போன்றவை தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சியை வழங்குவார்கள். வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் பத்தாம் வகுப்பு வரை அறிவியலைக் கற்றுத் தருவார்கள். மீதி இரு பாடங்களையும் அவற்றிலுள்ள சோதனைகளையும் அவர்கள் புரிந்துகொள்ள இந்தப் பயிற்சி உதவும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் எஸ்.உமா தெரிவித்தார். முதல் முறையாக, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு அறிவியலைக் கற்பிப்பதற்காக சிறப்புப் பயிற்சியும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் ஆசிரியர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகள் குறித்து விளக்கமளிக்கும் பயிற்றுநர். (வலது) அறிவியல் பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள்
No comments:
Post a Comment