பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச, "கிரையான்ஸ்' பென்சில், புத்தக பை உள்ளிட்ட, ஏழு பொருட்களை வழங்க, 256 கோடி ரூபாய்க்கு, பாடநூல் கழகம், "டெண்டர்' அறிவித்து உள்ளது. தமிழக அரசு, மேற்கண்ட பொருட்கள் உட்பட, 14 வகையான இலவச திட்டங்களை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறது.இதற்காக, ஆண்டுதோறும், 4,000 கோடி ரூபாயை செலவழிக்கிறது. கடந்த ஆண்டுகளில், பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை சேர்ந்து, இலவச திட்டங்களை வினியோகித்தன. கல்வி பணியுடன், இலவச பொருட்கள் வழங்கும் பணியையும் சேர்த்து செய்வது, நடைமுறை ரீதியாக, பல சிக்கல்கள் இருப்பது குறித்தும், நிர்வாகப் பணிகள் பாதிப்பது குறித்தும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, இலவச திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு, பாடநூல் கழகத்திடம் ஒப்படைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, வரும் கல்வி ஆண்டில், முதல் முறையாக, 14 வகையான இலவச பொருட்களை, பாடநூல் கழகம், மாணவர்களுக்கு வழங்க உள்ளது. இதில், "கிரையான்ஸ்' பென்சில், கம்பளிச் சட்டை, புத்தக பை, "ஜியாமெட்ரிக் பாக்ஸ், அட்லஸ்' மற்றும் காலணி ஆகிய, ஏழு பொருட்களை, 256.85 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்ய, பாடநூல் கழகம், "டெண்டர்' அறிவித்து உள்ளது. "கிரையான்ஸ்' பென்சில், 2.25 கோடி; பென்சில், 4.3 கோடி; புத்தக பை மற்றும் காலணி ஆகியவை, தலா, 120 கோடி ரூபாய் மதிப்பில், கொள்முதல் செய்யப்படும் என, பாடநூல் கழகம் தெரிவித்து உள்ளது. தகுதி வாய்ந்த நிறுவனங்கள், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்த விவரங்களை,தமிழக அரசு இணையதளத்தில் பார்க்கலாம்
No comments:
Post a Comment