அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய சிறந்த கண்டுபிடிப்புக்கு ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பரவலாகக் காணப்படும் போக்குவரத்து, மன அழுத்தம் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை போன்றவை இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சினைகளாக இருக்கின்றன. இவற்றுக்கான தீர்வினைக் கண்டுபிடிக்கும் இந்தியர்களுக்காக ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகையை மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். இவர் ஆட்டோமொபைல் துறையிலிருந்து விண்வெளித் தயாரிப்புகள் வரை முத்திரை பதித்துள்ள மஹிந்திரா தொழில்நிறுவனத்தின் தலைவர் ஆவார். நெருக்கடி மிகுந்த இந்திய போக்குவரத்து அமைப்பிற்கேற்ப இயங்கக்கூடிய தானியங்கிக் கார் ஒன்றினைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 7,00,000 அமெரிக்க டாலர்களும், வீட்டு உபயோக ஆற்றல் தேவைகளை சமாளிக்கக்கூடிய சூரிய சக்தி சாதனம் ஒன்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 3,00,000 அமெரிக்க டாலர்களும் அளிக்கப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. பரிசு அடிப்படையில் தனியார் நிறுவனம் அளிக்கும் மிகப்பெரிய பரிசுத்தொகை இதுவாகும். இந்திய மதிப்பில் 6.2 கோடி மதிப்பு பெறும் இந்தப் பரிசுத்தொகையானது தினசரி இந்திய வாழ்க்கைமுறையை மாற்றக்கூடிய சாத்தியங்களை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இந்த இரண்டு சவால்களும் சமூகம், ஆற்றல் சம்பந்தப்பட்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியேயும் அங்கீகாரம் பெறும் வகையிலும், நமது தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உணரும்வகையிலும், புதிய வர்த்தக முன்னேற்றத்தைத் தூண்டும்வகையிலும் இந்தக் கண்டுபிடிப்புகள் இருக்கவேண்டும் என்று ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார். கூகுள் இணையதளம் தானியங்கிக் கார்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்வது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் நகரத்தில் பணியாற்றும் இக்குழுவின் தலைமைப் பொறியாளரான செபாஸ்டியன் தர்ன் அணியினர் தங்களது இந்தத் தானியங்கி கார் கண்டுபிடிப்பிற்காக அமெரிக்கப் பாதுகாப்புத்துறையிடமிருந்து 2 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாகப் பெற்றுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment