தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி முடிவு, வேட்பாளார்களை அறிவித்தல், தேர்தல் அறிக்கையை தயாரித்தல் மற்றும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் என இந்திய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையமும் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. மிக விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், தமிழகம் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார். இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்களிடம் அவர் கூறியதாவது: 70 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள்: தமிழ்நாட்டில் 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சுமார் 70 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்கள் வைக்க திட்டமிட்டுள்ளோம். அனைத்து ஓட்டு எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. தேர்தலை முழு வீச்சில் நடத்துவதற்கு தயார் நிலையில் இருக்கிறோம். பயிற்சி: தற்போது தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சிகளை அளித்து வருகிறோம். ஒரு மாவட்டத்துக்கு 14 தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்கள் வீதம், அனைத்து மாவட்டத்துக்கும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு ஆகியோருக்கான பயிற்சி நிறைவடைந்துவிட்டது. 30 ஆயிரம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள்: ஒரு மாவட்டத்தில் இருந்தும் ஓட்டுச்சாவடி அலுவலரை தேர்வு செய்து, மொத்தம் 130 பேருக்கு மாஸ்டர் பயிற்சி அளிக்க இருக்கிறோம். இந்தப் பயிற்சி பெற்றவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். ஒட்டுமொத்த பயிற்சி இல்லை: ஒட்டுமொத்தமாக பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் ஒவ்வொரு பயிற்சியிலும், பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை 50-ஐ தாண்டக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளோம். இந்தப் பயிற்சிகள் 25-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை நடக்கிறது. ஆறு குழுக்கள்: அதுபோல் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் மாஜிஸ்திரேட்டு அதிகாரம் கொண்ட அதிகாரி ஒருவரின் தலைமையில் ஒரு வீடியோகிராபர், 3 போலீசாரைக் கொண்ட ஆறு குழுக்கள் அமைக்கப்படும். பறக்கும் படை: பறக்கும்படையாக இந்த குழுக்கள் செயல்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 1,400 குழுக்கள் உருவாக்கப்படும். இவர்களுக்கு 27 மற்றும் 28-ந் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படும். கலெக்டர்கள் ஆலோசனைக்கூட்டம்: இதுதவிர தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலெக்டர்களையும் 28-ந் தேதி சென்னைக்கு அழைத்துள்ளேன். இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடம் இன்னும் முடிவாகவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர்களுடன் தினமும் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை வழங்கி வருகிறேன். பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகள்: எனது அலுவலகத்திலும் 11 தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமித்துள்ளேன். அவர்களுக்கு பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. போலீசார் தவிர தமிழகம் முழுவதும் மூன்றரை லட்சம் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள். மத்திய அரசு ஊழியர்கள் பெரும்பாலும், பிரச்சினைக்குரிய பகுதிகளில் நுண்ணிய கண்காணிப்பாளராக செயல்படுவார்கள். பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகள் பற்றி கணக்கெடுத்து வருகிறோம். விண்ணப்பம்: எம்.பி. தேர்தலில் போட்டியிடுவோர் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு டெபாசிட் தொகை ரூ.12 ஆயிரத்து 500 ஆகும். தமிழகத்தில் 9 லட்சம் புதிய வாக்காளர்கள் உட்பட 5 கோடியே 37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் மாற்றம் கொண்டு வர விரும்புவோர், வேட்புமனு தாக்கல் தேதிக்கு (இன்னும் அறிவிக்கப்படவில்லை) 10 நாட்கள் முன்புவரை விண்ணப்பிக்கலாம். 20 ஆயிரம் வெப் ரோ: கடந்த தேர்தலில் 10 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப் ரோ வைத்திருந்தோம். இந்த முறை 20 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் அந்த வசதியைப் பொருத்த திட்டமிட்டுள்ளோம் ", இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment