தொழிலாளர்களின் ஓய்வுக்காலத்துக்காகப் பிடித்தம் செய்யப்படும் பிராவிடண்ட் ஃபண்டை கணக்கிடுவதற்கான சம்பளத் தொகையின் வரம்பை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இங்கு சம்பளம் என்பது அடிப்படை மற்றும் பஞ்சப்படி மட்டுமேயாகும். மேலும், பிஎஃப் பென்ஷன் தொகையையும் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் எனவும், பிஎஃப் மூலமாகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையையும் 3.6 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல பிஎஃப் கமிஷனர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார்.
“வேலை செய்யும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து அதிகபட்சம் 6,500 ரூபாயை வரம்பாக வைத்து பெரும்பாலான நிறுவனங்கள் பிஎஃப் பிடித்தம் செய்து வருகிறது. ஒரு தொழிலாளரின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம், பஞ்சப்படி சேர்த்து 12 சதவிகித தொகையை பிடித்தம் செய்வார்கள். இதே அளவு தொகையை நிறுவனமும் உங்களின் கணக்கில் வரவு வைக்கும்.
தற்போது பிஎஃப் பிடித்தம் செய்வதற்கான சம்பளத்தொகை வரம்பு 6,500-லிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். இதில் அதிகபட்சமாக 6,500 ரூபாய்க்கு 12 சதவிகிதம் என 780 ரூபாய் பிடிக்கப்பட்ட பிஎஃப் இப்போது 1,800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்தும். நிறுவனம் செலுத்தும் தொகையில் 8.33 சதவிகித தொகை பி.எஃப் பென்ஷனுக்காகவும், மீதமுள்ள 3.36 சதவிகித தொகை பி.எஃப் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.
இதுவரை பென்ஷனுக்காக அதிகபட்சம் ரூ. 541 ் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இனி இந்தத் தொகை 1,249 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். மேலும் 01.09.2014 தேதி முதல் பென்ஷன் ஊதிய தொகையானது, பென்ஷனை கணிப்பதன் பொருட்டு சந்்தாதாராக இருந்த 60 மாத கால சராசரி ஊதியம் ஆகும். 31.08.2014 வரைக்குமான பென்ஷன் ஊதியத்தொகை ரூ.6,500 ஊதிய வரைவிற்கேற்ப ஒரு பகுதியாகவும் தொடருகின்ற காலத்துக்கு ரூ.15,000 ஊதிய வரைவிற்கேற்பவும் கணக்கிட்டு வரையறுக்கப் படும்.
01.09.2014 முதல் ஓய்வூதிய திட்டமானது ரூ.15,000 வரையிலுமாக ஊதியம் பெறுகின்ற பிஎஃப் உறுப்பினர்களுக்க்கு மட்டுமே பொருந்தும். 01.09.2014 முதல் ரூ.15,000க்கு கூடுதலாக மாத ஊதியம் பெறுகின்ற புதிய பிஎஃப் உறுப்பினர்களது தொழிலாளர் மற்றும் தொழில் நிறுவனர் பங்கான பிஎஃப் சந்தா தொகையிலிருந்து ஓய்வூதிய திட்டத்துக்கு பகிர்ந்தளிக்கப்படமாட்டாது.
பிஎஃப் அமைப்பு ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. இந்த ஓய்வூதியம் பெறுகிறவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகையைக் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் உடனடியாக சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள். வேலையில் இருக்கும்போது உடல்நலக் குறைவு, விபத்து போன்ற காரணத்தில் மரணம் ஏற்படும்போது தொழிலாளரின் குடும்பத்தின் நலனுக்காகத் தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீடுத் திட்டம் (Employees’ Deposit-Linked Insurance Scheme) உள்ளது. இதன் கவரேஜ் தொகையையும் அதிகப் படுத்தியுள்ளது. அதாவது, அதிகபட்சம் ரூ.1,56,000-லிருந்து ரூ.3,60,000 என உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் காப்பீடு திட்டத்துக்காக பிரீமியம் தொகை அனைத்து நிறுவன மும் கட்டாயம் செலுத்த வேண்டும். இதை பிஎஃப் அலுவலகத்தில் செலுத்த லாம். எல்ஐசியிலும் பிரீமியம் செலுத்தி காப்பீடு பெறலாம். இப்படி செய்யும் போது பிஎஃப் அமைப்பு வழங்கும் கவரேஜ் தொகையைவிட கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் கவரேஜ் கிடைக்கும்.
எல்ஐசியில் பிரீமியம் செலுத்தும் சான்றிதழை குறிப்பிட்ட கால இடைவெளியில் பிஎஃப் அலுவலகத் தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லை யெனில், நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் இழப்பீடு கிடைக்கவில்லை எனில், ஊழியர்கள் நேரடியாக பிஎஃப் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.
பிஎஃப் பிடித்தம் செய்யும் தொகை, குறைந்தபட்ச பென்ஷன் ஆயிரம், இன்ஷூரன்ஸ் கவரேஜ் என அனைத்தை யும் உயர்த்திய அரசு 1.09.2014-க்கு பிறகு வேலைக்குச் சேருபவர்களில் 15,000 ரூபாய்க்குமேல் சம்பளம் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது என அறிவித்துள்ளது.
அதாவது, மருத்துவத் துறையின் வேகமான வளர்ச்சியினால் மனிதனின் வாழ்நாள் அதிகமாகி உள்ளது. இதனால் பென்ஷன் பெறும் ஆண்டுகளின் எண்ணிக்கை அதிகமாகும். புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு பென்ஷன் தொகை நிறுத்தப்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத் தேவைகளுக்காக எந்த திட்டமிடலும் இல்லாத நம் மக்களிடையே திடீரென பென்ஷன் தொகை நிறுத்தப்பட்டால் மிகவும் கஷ்டப்படுவார்கள். இன்றைய நிலையிலேயே இருவர் கொண்ட ஒரு குடும்பத்தை நிம்மதியாக கழிக்க குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாயாவது வேண்டியிருக்கும்.
இதுவே இன்னும் 20 ஆண்டுகள் கழித்து சுமார் 7 சதவிகிதம் பணவீக்கம் என வைத்துக் கொண்டால் கூட சுமார் 58,045 ரூபாயாவது தேவையாக இருக்கும் என்கிறபோது 58 வயதுக்குப்பின் குறைந்தபட்ச பென்ஷனும் இல்லை எனில், பலரது ஓய்வுக்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
No comments:
Post a Comment