தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மொழிப்பாடங்களில் பின்தங்கி இருப்பதாக, கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. 'இத்தகைய குறைபாடுகளை களைய,
lகற்பித்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவிபெறும் நிலையில், 28 ஆயிரத்து 591 துவக்க மற்றும் 9,259 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் கல்வித்திறன், மொழி உச்சரிப்பு, பாடங்களை உள்வாங்கிக் கொள்ளும் விதம் ஆகியவற்றை கண்காணிக்க, கல்வித்துறை இணை இயக்குனர் தலைமையில், மாவட்டந்தோறும் உள்ள கல்வி அதிகாரிகளின் சார்பில், ஆய்வுப்பணிகள் நடந்தன.இதில், பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளில், மாணவர்கள் மொழி உச்சரிப்பில் தடுமாறுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, நடுநிலைப்பள்ளி மாணவர்களே தமிழ்ப்பாட உரைநடைப்பகுதியில், பத்திகளை முழுமையாக வாசிப்பதற்கு கூட சிரமப்பட்டுள்ளனர். ஆங்கிலப்பாட புத்தகத்தில் பெரும்பாலான வார்த்தைகளின் பொருள், உச்சரிக்கும் விதம் தெரிவதில்லை.
'இது தொடர்ந்தால், உயர்கல்வியில் மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறுவதற்கே பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கும்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, மலைப்பகுதி பள்ளிகளில், மாணவர்களது கல்வித்தரம் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மேம்படுத்த, வகுப்பாசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், ''கிராமப்புற பள்ளிகளில் படித்து, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், ஆங்கிலப்பாட அறிவு குறைபாடால், உயர்கல்வியில் சராசரி மதிப்பெண்கள் பெறுவதற்கு கூட திண்டாடுவது தொடர்கதையாகி வருகிறது.
''மொழிப்பாட அறிவில்லா மாணவர்களால், உயர்கல்வியில் முத்திரை பதிக்க முடியாது. தமிழ் வழியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், உயர்கல்வி முடித்ததும், மொழி அறிவு குறைபாடால், செய்தித்தாள் வாசிப்பதில் கூட திணறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த முரண்பாடு களைய, கற்பித்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.''எழுத்துகள் அமைவிடம், உச்சரிப்பு, பொருள் குறித்து படங்கள் வாயிலாக, தெளிவுபட விளக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகள் மூலம், மாணவர்களின் மொழிப்பாட அறிவை அதிகப்படுத்த முடியும்," என்றார்.
No comments:
Post a Comment