திருக்குறள்

10/11/2014

6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில துணைப் பாடப் புத்தகம்

சமச்சீர் கல்வியின் கீழ் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில துணைப் பாடப் புத்தகம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வியின் கீழ், தமிழகம் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பொதுப்பாடத் திட்டம் 2011-12-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாடத்திட்டத்தின் கீழ், ஆங்கிலப் பாடத்துக்கு ஒரு புத்தகம் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், மாநிலப் பாடத்திட்டங்களின் கீழ் மாணவர்களுக்கு ஆங்கில துணைப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், பொதுப் பாடத் திட்டத்தின் கீழ், துணைப் பாடப் புத்தகம் வழங்கப்படவில்லை.

மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வாசிக்கும் திறனை ஊக்குவிப்பதற்காக மீண்டும் இந்த துணைப் பாடப் புத்தகத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 10 சிறிய கதைகள் கொண்ட புத்தகமும், 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரேயொரு கதை கொண்ட புத்தகமும் வழங்கப்பட உள்ளது. வாரத்தில் ஒரு நாள் இந்தப் புத்தகத்திலிருந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பார்கள். இந்தப் புத்தகத்தின் மூலம் ஆங்கிலம் வாசிப்பதில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தைத் தயாரிக்கும் பணிகள் இப்போது தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக, அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பாடப்புத்தகங்கள் இறுதிசெய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2016-17-ஆம் கல்வியாண்டில் இந்தப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment