மாணவர்களின் கல்வி ஆற்றலை தூண்டும் வகையில், மனப்பாடம் செய்யும் கல்வி முறைக்கு மாற்றாக, திறந்த புத்தகத் தேர்வு முறையை சிபிஎஸ்இ இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது.முதற்கட்டமாக 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு இது அறிமுகம் செய்யப்படுகிறது. 9ம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும், பிளஸ் 1 வகுப்பில் புவியியல், பொருளாதாரம், உயிரியல் ஆகிய பாடங்களிலும் இந்த முறை அறிமுகம் செய்யப்படுகிறது.இந்த திறந்த புத்தகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வின்போது இந்த பிரிவுக்கான பல பதில்கள் மாணவர்களிடம் வழங்கப்பட்டு விடும். கேள்விக்கு தகுந்தபடி சரியான பதில்களை அவர்கள் எழுத வேண்டும். கேள்விகள், மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் இருக்கும். சென்னை மண்டலத்தில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் திறந்த புத்தகத் தேர்வு முறையை 4 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''பிளஸ் 1 வகுப்பில் திறந்த புத்தகத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும் பாடங்களுக்கான தேர்வுகள் வழக்கமான முறையிலேயே நடக்கும்.இந்த பாடங்களில் திறந்த புத்தகத் தேர்வு முறை மட்டும் கூடுதலாக இடம்பெறும். அந்த பிரிவுக்கு தலா 10 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்பதால், அதற்கு ஏற்றபடி வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இப்பகுதிக்கு உரிய விடைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வினாக்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய தேர்வு முறைக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் அதன் செயல்பாட்டை பொறுத்து பிற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment