தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக 2013-14 ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 2013 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. அதனையடுத்து மாவட்ட அளவில் முதலிடத்தைப் பெற்ற மாணவ / மாணவியர்களைக் கொண்டு மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் சென்னை மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (27ஆம் தேதி) அன்று நடத்தப்பெற்றது.
மாநிலப் போட்டிக்கான நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் சு. தம்புசாமி வரவேற்புரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் முன்னிலை உரையும், சென்னை பொதிகைத் தொலைக்காட்சி நிலைய இயக்குநர் முனைவர் பால ரமணி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் மணிகண்டன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தியும், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்குப் பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையும், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் கோ.செழியன் நன்றியுரையும் ஆற்றினார்கள்.
மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பள்ளி முத்தமிழ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி ச.சரண்யா முதலிடத்தையும், சேலம் மாவட்டம், மேட்டூர் அணை புனித மரியண்ணை மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி இரா.பூமணி இரண்டாமிடத்தையும், ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் சி.பூவரசன் மூன்றாமிடத்தையும், கட்டுரைப் போட்டியில் மதுரை ஜோதி மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி ச.பவித்ரா முதலிடத்தையும், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி இர.வித்யா இரண்டாமிடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவன் கெ.சச்சின் மூன்றாமிடத்தையும், பேச்சுப் போட்டியில் புதுக்கோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மு.பு.லாவண்யா முதலிடத்தையும், பெரம்பலூர் மௌலானா மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் சி.அலிமுதீன் இரண்டாமிடத்தையும், ராமநாதபுரம் தர்ம வாவன விநாயகர் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் மு.லெனின்குமார் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற கவிதைப் போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி ஆண்டவர் செவிலியர் பயிற்சிப் பள்ளி முதலாமாண்டு மாணவி இரா.நீலாவதி முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் சாரதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பூ.ரஞ்சிதா இரண்டாமிடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரி மாணவன் க.கலைவண்ணன் மூன்றாமிடத்தையும், கட்டுரைப் போட்டியில் திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரி முதுகலை தமிழ் முதலாமாண்டு மாணவன் இரா.கண்ணன் முதலிடத்தையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவனைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டியல் மூன்றாமாண்டு மாணவி சுவாதி பிரியா இரண்டாமிடத்தையும், விழுப்புரம் மாவட்டம், கொல்லியங்குணம் பவுட்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை இயற்பியல் மூன்றாமாண்டு மாணவி கோ.சாந்தகுமாரி மூன்றாமிடத்தையும், பேச்சுப் போட்டியில் திருவண்ணாமலை கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி க.அபிதா முதலிடத்தையும், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளைம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவன் க.ஆதிலிங்கம் இரண்டாமிடத்தையும், திருவாரூர் சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் இரா.கார்த்திக் ராஜா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.15,000/-, இரண்டாம் பரிசு ரூ. 12,000/-, மூன்றாம் பரிசு ரூ. 10,000/- எனும் வகையில் வழங்கப்படும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment