தமிழக கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர், அமெரிக்காவில் பயிலும் மாணவருடன் "வீடியோகான்பரன்ஸ்' மூலம் கலந்துரையாடும் திட்டம், பள்ளி கல்வித் துறையில் விரைவில் அமலாக உள்ளது.
தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், "பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை' (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இணையதளம் மூலம் "பள்ளி விட்டு பள்ளி, மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு' என்ற அடிப்படையில், கல்வியறிவு, கற்பதற்கான புதிய வழிகளை வேறுபட்ட முறையிலும், மாறுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் கற்கும் வாய்ப்பு இதனால் ஏற்படும். தமிழகத்தில் 160 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்,
128 நடுநிலைப் பள்ளிகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சோதனை ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தொழிற்நுட்ப கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், இணையதள வசதி, கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப், 3 ஜி டேட்டா கார்டு, வெப் கேமரா, மைக்ரோ போன், ஸ்பீக்கர்கள் வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் ஜெயலலிதாவின் தேதிக்காக, கல்வித்துறையினர் காத்திருக்கின்றனர். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், தமிழக பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருக்கும்.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வரின், "விஷன் 2023' திட்டத்தின்கீழ் திட்டம் அமல்படுத்தப்படும். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், இடைநிலைக் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்தவும் பயன்படும். முதற்கட்டமாக, மாநில பள்ளிகளில் "வீடியோகான்பரன்சிங்' வசதி செய்யப்படும். தொடர்ச்சியாக, வெளிநாட்டு மாணவர்களுடம் நம் மாணவர்கள் கலந்துரையாட விரைவில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான தீவிர பணிகளில் கல்வித்துறை செயலாளர் சபிதா தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, நூலகப் புத்தகங்களை பயன்படுத்தத் தூண்டும். வேறுபட்ட வட்டார மொழிச் சொற்களின் அறிமுகம் பெறவும், மொழியாளுகைத் திறனும் மாணவர்களிடம் வளரும், என்றார்.
No comments:
Post a Comment