அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் ஒருநாள் வேஷ்டி அணிந்து வேஷ்டி நாள் கொண்டாடுமாறு சகாயம் ஐஏஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து, கூட்டு நெசவு (கோ ஆப் டெக்ஸ்) பணியாட்சித் துறை அரசு அலுவலகங்களுக்கு அதன் இயக்குநர் சகாயம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் சகாயம் கூறியிருப்பதாவது... இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில் உரோமானியர்களுக்கு ஆடை அனுப்பி நாகரீகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள் தான். அத்தகைய ஆடைப் பரம்பரை கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்ட காலமாக நின்று நிலைத்தது வேட்டி. வேட்டி அணிவது தமிழர்களின் ஆடை மரபின் அழகான வெளிப்பாடு. பரம்பரையின் பகட்டு, மனிதனின் மானம் காத்தது மட்டுமன்றி மண்ணின் மணத்தை மாண்புறச் செய்ததும் வேட்டி தான். இன்றைய புதுமை நாகரிகச் சூழலில் வேஷ்டி அணிவது குறைந்து விட்டது. இப்போது, வீறார்ந்த வேஷ்டியைக் காணமுடியவில்லை. வேஷ்டி என்பது வெறும் ஆடையின் அடையாளம் மட்டுமல்ல, எளிய நெசவாளர்களின் வியர்வையின் வெளிப்பாடு. உழைப்பின் உயர்சிறப்பு. வேஷ்டி என்கிற ஆடை மரபைப் போற்றவும்,வலுப்படுத்தவும் அதைத் தொய்வில்லாமல் நெசவு செய்யும் நெசவாளர்களுக்குத் தோள் கொடுக்கவும், "வேஷடி நாள்' கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது . வேஷ்டி அணிவது மரபை மதிக்க மட்டுமல்லாமல், அதன் மருத்துவச் சிறப்பபை உணர்த்தவும், தமிழர்களின் மரபு விழாவாம் பொங்கல் திருநாளுக்கு முன்பாக 2014 சனவரியில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து வேஷ்டி நாளாகக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு துறையிலும் பணி செய்யும் அனைத்துப் பணியாளர்களின் விருப்பத்துடன் வேஷ்டி அணிந்து மரபின் மாண்பை வெளிப்படுத்த வேண்டுகிறோம். இதன் மூலம் ஏழை நெசவாளர்களின் வாழ்வுக்கு வழி செய்யவும், கூட்டு நெசவு (கோஆப்டெக்ஸ்ன்) விற்பனைக்கு உதவக் கூடியது ஆகும். எனவே, இந்த திட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தச் சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியர்கள், அனைத்துத்துறைத் தலைவர்கள் என அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 'வேஷ்டி நாள்' கொண்டாடும் வகையில் ரூ. 130 முதல் ரூ. 500 வரையிலான அனைத்து வடிவங்கள், வண்ணங்களில் அனைத்து வகை நூலில் சிறிய, பெரிய கறையுடன் கூடிய வகைகளைக் கூட்டு நெசவு (கோஆப்டெக்ஸ்) உற்பத்தி செய்துள்ளது.
No comments:
Post a Comment