ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கடைபிடித்து வரும் வேளையில், தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிய கிளர்க்கை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.
அக்டோபர், 28 முதல், நவம்பர், 2ம் தேதி வரை, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அனைத்து அரசு ஊழியர்களும், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்வர். இந்நிலையில், தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், பில் செக்ஷனில், எழுத்தராக பணியாற்றி வருபவர் மோகன்ராம், 50. இவர், தாரமங்கலம் யூனியன் வணிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின், பி.எஃப்., மற்றும் ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றுக்காண பில்களை பாஸ் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து, வணிச்சம்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார், தலைமை ஆசிரியர் செல்வத்திடம், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
நேற்று முன்தினம் மாலை, தாரமங்கலம் ஏ.இ.ஓ., அலுவலகம் சென்ற தலைமை ஆசிரியர் செல்வம், ரசாயன பவுடர் தடவிய பணத்தை, எழுத்தர் மோகன்ராமிடம் வாங்கினார். அப்போது, அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., சந்திரமௌலி, இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார், மோகன்ராமை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மோகன்ராம் சிறையிலடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment