அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் சார்பில், நிலை உயர்த்தப்பட்ட, புதிய பள்ளிகளுக்கான கட்டட நிதியை இரு ஆண்டுகளாக, மத்திய அரசு வழங்கவில்லை; இதனால், பெரும்பாலான புதிய பள்ளிகளில், கட்டட வசதியின்றி, மாணவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதியுதவியுடன், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு கல்வித்தரத்தை மேம்படுத்த தமிழக அரசின் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககம் செயல்படுகிறது. இதில், ஒவ்வொரு, 5 கி.மீ., சுற்றளவில், ஒரு உயர்நிலைப் பள்ளி அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 2009-10ல், 200 நடுநிலைப் பள்ளிகள், 2010-11ல், 344 நடுநிலைப் பள்ளிகள், 2011-12ல், 710 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இதில் பாடவாரியாக குறைந்தது, ஐந்து ஆசிரியர் பணியிடங்கள், ஐந்து வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறை, நூலகம் உள்ளிட்டவைக்காக ஒவ்வொரு பள்ளிக்கும், 58 லட்சம் ரூபாய் மத்திய அரசின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிதி, 2009-10ல் நிலை உயர்த்தப்பட்ட 200 பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பின், நிலை உயர்த்தப்பட்ட 344 மற்றும் 710 பள்ளிகளுக்கு, கட்டட நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், நிதி வழங்கப்படவில்லை.
இதனால் தமிழகத்தில், புதிதாக நிலை உயர்த்தப்பட்ட, 1,054 பள்ளிகள், புதிய கட்டடம் ஏதுமின்றி, ஏற்கனவே இயங்கி வந்த, நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்தி வருகின்றன. வகுப்பறை கட்டட பற்றாக்குறையால், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் போது, எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளி, நிர்வாக ரீதியாகவும், கட்டட ரீதியாகவும் இரண்டாக பிரிக்கப்படும். அதில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மற்றும் கட்டடம் உயர்நிலைப் பள்ளியில் இணைக்கப்படும். இவர்களுக்கான புதிய கட்டடம், திட்ட நிதியில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஏற்கனவே, நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளில், 2009-10ல், நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும், ஒதுக்கீடு செய்த, கட்டட நிதியை, மத்திய அரசு வழங்கியுள்ளது. அதுவும், பற்றாக்குறையாக இருந்ததால், கட்டி முடிக்க முடியாத நிலையில், தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, அப்பணிகளை முடித்தது. ஆனால், பற்றாக்குறை நிதி கூட, அடுத்தடுத்த ஆண்டுகளில் வழங்கவில்லை. இதனால், 2010-11ம் ஆண்டிலிருந்து, நிலை உயர்த்தப்பட்ட, 1,054 புதிய பள்ளிகளில், புதிய கட்டட பணிகள் துவக்கப்படவில்லை.
ஏற்கனவே, நடுநிலைப் பள்ளியில் இருந்து பிரிக்கப்பட்ட, கட்டட வகுப்பறையை மட்டும் வைத்து, சமாளித்து வருகின்றனர். ஒரு வகுப்பறையில், இரண்டு வெவ்வேறு வகுப்பு மாணவர்களை அமர வைத்து, பாடம் எடுக்கும் நிலையும், பல பள்ளிகளில் உள்ளது. இதனால் அரசு பள்ளிகளின் மீதான நம்பிக்கை, மக்களிடம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், இந்த கல்வியாண்டிலும், இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யுமா என, தெரியவில்லை.
மத்திய அரசிடம் இருந்து, நிதியை பெற்றுத் தருவதில், உயர் அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment