தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) செயல்பாடுகள் தொடர்பாக "ஆவணப்படங்கள்' தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. முதல் முயற்சியாக, மதுரை மாவட்டத்தில் இதற்கான பணி துவங்கியுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் 2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இதில் ஒரு பிரிவான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பகல்நேர மையங்கள், ஆதார மையங்கள் என ஒவ்வொரு ஒன்றியங்களிலும் உள்ளன.
இவற்றில், காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, கை, கால் செயலிழந்த, மூளை முடக்கு வாதத்தால் பாதித்த, ஆட்டிசம் மற்றும் கற்றலின் குறைபாடால் பாதித்தவர்கள் என எட்டு வகை பாதிப்புடைய ஒன்று முதல் 18 வயது வøரான இயலாக் குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு, உடலை தூய்மையாக பராமரிப்பது, உடைகள் அணிதல், கழிப்பறையை எவ்வாறு பயன்படுத்துவது, பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி, தசைப் பயிற்சி போன்றவை சிறப்பாசிரியர்கள் மூலம் அளிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 430க்கும் மேற்பட்ட மையங்களில், 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மேலும், மையங்களுக்கு தினமும் வரமுடியாத இயலாக் குழந்தைகளுக்கு, அவர்களின் வீடுகளுக்கு சென்றும் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இப்பயிற்சி மூலம் முன்னேற்றமடையும் மாணவர்கள், "ரெகுலர்' மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு இணையாக படிக்கின்றனர். இத்திட்டத்தின் கீழ் தற்போது அவ்வாறு பயனடைந்த மாணவர்கள் விவரம், அவர்களின் தற்போதைய நிலைமை குறித்து விவரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவணப்படம்: இத்திட்ட செயல்பாடு, பயிற்சி மூலம் மாணவர்கள் பெற்ற வெற்றியின் வெளிப்பாடு, பெற்றோர் உணர்வுகள், சிறப்பாசிரியர்கள் அனுபவங்கள், மைய காப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், கிராம மக்கள் கருத்துக்களை உள்ளடக்கிய ஆவணப்படங்கள் தயாரிக்க இத்திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, முதற்கட்டமாக மதுரை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, இங்குள்ள 15 அரசு பகல்நேர மையங்கள் மற்றும் 15 ஆதார மையங்களில் தேர்வுசெய்யப்பட்ட மையங்களில் இதற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளன. இத்திட்ட இணை இயக்குனர் நாகராஜ முருகன் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆவணப்படம் தயாரிப்பது மூலம் திட்ட செயல்பாடுகள், மாணவர்களுக்கு அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்தும் மக்களிடம் சென்றடையும். 30 நிமிடங்கள் வரை ஓடும் வகையில் ஆவணப்படம் தயாரிக்கப்படுகி றது. மாநிலத்தில் முதன் முறையாக மதுரை மாவட்டத்தில் இப்படம் தயாரிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்ட செயல்பாடுகள் தொடர்பாகவும் ஆவணப்படங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்
No comments:
Post a Comment