திருக்குறள்

27/01/2014

தமிழகத்தில் தள்ளாடும் கூட்டுறவு சங்கங்கள்


தமிழகத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இனியும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அவற்றுக்கு மூடுவிழா நடத்துவதை தவிர வேறு வழியில்லை என கூட்டுறவாளர்கள் குமுறுகின்றனர். ஒரு கிராமத்தின் முன்னேற்றத்துக்கு ஒரு பள்ளிக்கூடம், ஒரு கூட்டுறவு வங்கி, ஒரு ஊராட்சி மன்றம் போதும் என்றார் நேரு. தமிழகம் முழுவதும் 4,526 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. 1904ம் ஆண்டு இயற்றப்பட்ட கூட்டுறவு சட்டப்படி இந்தியாவின் முதல் கூட்டுறவு சங்கம் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திரூரில் தான் தொடங்கப்பட்டது. 1934ம் ஆண்டு சட்டப்படி இது மாநில அரசின் பட்டியலுக்கு வந்தது. தொடர்ந்து 1961, 83ம்ஆண்டுகளில் சட்டங்கள் இயற்றப்பட்டன. சர்வதேச கூட்டுறவு மன்றத்தின் 7 தத்துவங்களை உலக நாடுகள் அங்கீகரித்து பின்பற்றுகின்றன. அவற்றின் முக்கிய அம்சமே சுயாட்சி மற்றும் சுதந்திரம். அது அரசாலும், அதிகாரிகளாலும் பறிக்கப்பட்டதாலேயே அவலநிலை ஏற்பட்டது என கூட்டுறவாளர்கள் அங்கலாய்க்கின்றனர். சுயமாக இயங்கிய கூட்டுறவு சங்கங்கள் ஒருகட்டத்தில் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது கிராமக்கடன் அளவீட்டு குழு அமைக்கப்பட்டது. சங்கங்களின் கடன்பெறும் தகுதியை அதிகரிக்க அரசு பங்குகளை முதலீடு செய்ய வேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது. இது தான் அரசு அதிகாரம் கூட்டுறவில் மூக்கை நுழைக்க முதல் காரணம். அரசு முதலீடும், அதிகாரிகளின் குறுக்கீடும் வந்ததும் 1976ல் மக்களாட்சி நிர்வாகம் அதிரடியாக கலைக்கப்பட்டது. நீண்ட வனவாசத்துக்கு பின் 1996ல் தான் தேர்தல் நடந்தது. பின்னர் 2001ல் கலைப்பு, 2007, 2013ல் மீண்டும் தேர்தல் என மாறிமாறி நடந்தது. தற்போது சுமார் 100 சங்கங்கள் செயல்பட சிரமப்படும் நிலையில் உள்ளன. நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களை புனரமைக்க மத்திய அரசின் நிதித்துறை சார்பில் பேராசிரியர் வைத்தியநாதன் தலைமையில் 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அது 4.2.2005ல் அளித்த அறிக்கையில், 'அரசியல் குறுக்கீடு கூடாது. சுதந்திரமான தேர்தல் நடத்தி நிர்வாக குழுவை தேர்ந்தெடுக்கவேண்டும்' என்பன போன்ற பரிந்துரைகள் அடங்கியிருந்தன. மேலும், சங்கங்களின் நஷ்டம் குறித்து சிறப்பு தணிக்கை செய்து விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றால் ஏற்பட்ட நஷ்டத்தை மத்திய அரசும், பொதுவிநியோகம் போன்ற திட்டங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை தமிழக அரசும், ஊழல் நடவடிக்கையால் ஏற்பட்ட நஷ்டத்தை அந்தந்த சங்கங்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி, நபார்டு, மாநில அரசு ஆகியவை 3.1.2008ல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன. சிறப்பு தணிக்கை மூலம் கணக்கிடப்பட்ட 'புனர்வாழ்வு' நிதி ரூ.1600 கோடியில் 75 சதவீதத்தை முன்னதாகவும், 25 சதவீதத்தை நிர்வாகிகள் தேர்தலுக்கு பின்னும் சங்கங்களுக்கு வழங்குவதாக ஏற்பாடானது. ஆனாலும் பல வங்கிகளுக்கு இன்னமும் 75 சதவீத நிதி வந்து சேரவில்லை. இதேபோல் அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.6800 கோடி விவசாய கடனை 5 தவணைகளில் 8 சதவீத வட்டியுடன் திருப்பி தருவதாக கூறியும் இன்னமும் பல சங்கங்களுக்கு வழங்கவில்லை. அடிக்கடி நிர்வாகத்தை கலைத்து அதிகாரிகளின் சர்வாதிகாரத்தின் கீழ் சங்கங்களை கொண்டுவந்தது, தள்ளுபடி மூலம் கடனை திருப்பிச்செலுத்தும் மனநிலையை சீரழித்தது, சட்டப்படியான கடன் வசூலுக்கு தடைவிதித்தது போன்றவற்றை கூட்டுறவு சங்கங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக பலரும் பட்டியலிடுகின்றனர். சங்கத்துக்கு கொடுக்கும் கடனுக்கு மத்திய வங்கி மாதந்தோறும் வட்டி வசூலிக்கிறது. சங்கமோ ஆண்டுக்காண்டு மட்டும் வட்டியை கணிக்கிறது. இதனால் அதிக நஷ்டத்தை சங்கம் சந்திக்கிறது. பொதுவிநியோக திட்டம் அரசுக்கு நற்பெயர், ஆனால் கூட்டுறவுக்கு நஷ்டக்கணக்கு என்கின்றனர் கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர். ''இதற்காக அரசு வழங்கும் கமிஷன் தொகை 14 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. 1 கிலோ அரிசிக்கு 45 பைசா, துவரம்பருப்புக்கு 50 பைசா, 1 லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 18 பைசா தான் இதுவரை கொடுக்கப்படுகிறது. சீனி விற்றால் சாக்கு தான் மிச்சம். அதையும் சங்கத்தின் நிர்வாகம் மூலம் விற்பனை செய்யாமல் தனிக்குழு அமைத்து விற்பதால் லாபமில்லை. ரூ.17க்கு விற்ற அரிசி சாக்கு தற்போது ரூ.8.80க்கும், ரூ.54க்கு விற்ற சீனி சாக்கு ரூ.48.05க்கும் விலை போகிறது. பொதுவிநியோக திட்டத்துக்கான செலவுத்தொகையை மானியமாக அரசு திருப்பி வழங்குவதாக ஏற்பாடு. ஆனால், கடுமையான தணிக்கை செய்து கணக்கு அனுப்பினாலும் 51 அல்லது 52 சதவீத தொகையையே மானியமாக அரசு வழங்குகிறது. வாடகை, ஊழியர் ஊதியம், கூலி என பலவித செலவுகள் 14 ஆண்டுகளில் ஏகமாக எகிறிவிட சங்கங்கள் சுலபமாக நஷ்டத்தை சந்திக்கின்றன'', என்கிறார் திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்செல்வன். கடந்த 2009ம் ஆண்டு நிலவரப்படி 1100 வீட்டு வசதி கடன் சங்கங்களில் உறுப்பினர் கடன் நிலுவை ரூ.2,500 கோடி. 500 நகர வங்கிகள் திவாலாகும் நிலை. இவற்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு. 17 பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களும் (ஆவின்) அதிக இழப்பை சந்திக்க அரசு மாதாமாதம் ரூ.17 கோடி அளித்து சரிவை தடுத்து நிறுத்தியது. மகாராஷ்டிரா, குஜராத், கேரளாவில் வணிக வங்கிக்கு நிகராக கூட்டுறவு சங்கங்கள் வளர்ந்துள்ளன. குஜராத் ஆனந்த் பால் உற்பத்தியாளர் சங்கமான அமுல் உலக மார்க்கெட்டில் உச்ச நிலையில் நின்று உபரி லாபத்தை ஈட்டிக்கொடுக்கிறது. கேரளாவில் கூட்டுறவு சங்கங்கள் இரும்பு கடை, சலூன், கல்லூரிகள் நடத்துகின்றன. திரைப்படங்களும் தயாரிக்கின்றன. இதற்கு உறுப்பினர் பங்களிப்பு அதிகம், அரசு தலையீடு கிடையாது என்பவையே காரணம். வைத்தியநாதன் குழு பரிந்துரையால் 60 சதவீத கூட்டுறவு சங்கங்கள் தப்பி பிழைத்தன. அரசும் தன் பங்குக்கு ஆதரித்தால் மீதியுள்ள சங்கங்கள் அழிவின் விளிம்பிலிருந்து மீளும் என கூட்டுறவாளர்கள் கருதுகின்றனர். எண்ணமும் வண்ணமும் ஏழு கூட்டுறவு சங்க கொடி வானவில்லின் 7 வண்ணங்களை கொண்டது. அதன் அடிப்படை தத்துவங்கள்: 1. தானாக முன்வந்து அனைவரும் உறுப்பினராகலாம். 2. உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் மக்களாட்சி. 3. உறுப்பினர்களின் பொருளாதார பங்கு. 4. சுயாட்சி மற்றும் சுதந்திரம். 5. கூட்டுறவு கல்வி, பயிற்சி, தகவல்கள். 6. கூட்டுறவு நிறுவனங்களிடையே கூட்டுறவு. 7. சமுதாய நலனில் ஈடுபாடு. இந்த 7 தத்துவங்களும் சர்வதேச கூட்டுறவு மன்றத்தின் சார்பில் மான்செஸ்டரில் 1966 மற்றும் 1995ல் பிரகடனப்படுத்தப்பட்டு அனைத்து நாட்டு கூட்டுறவு இயக்கங்களாலும் அங்கீகரித்து பின்பற்றப்படுகிறது. இதற்கு உட்பட்டே கூட்டுறவு சட்டங்கள் இயற்றப்படவேண்டும்.

No comments:

Post a Comment