தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்1ஐ, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.
அதேபோல், 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பணிபுரியக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்&2ஐ கடந்த 18ம் தேதி சுமார் 4 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், இரண்டு தேர்வுக்களுக்குமான ‘கீ ஆன்சரை’ கடந்த மாதம் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், டி.ஆர்.பி. வெளியிட்ட ‘கீ ஆன்சரில்’ ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் வருவதாகவும், சில கேள்விகளில் குளறுபடிகள் இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் ஆதாரத்துடன் புகார்களை தெரிவித்திருந்தனர்.
இந்தச் சூழலில் புதிய கீ ஆன்சரையும், தேர்வு முடிவையும் டி.ஆர்.பி. எப்போது வெளியிடும் என்றும், புதிய கீ ஆன்சர் வெளியிடும்போது, தவறான கேள்விகளுக்கு கூடுதல் மார்க் வழங்கப்படுமா என்றும் தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு குறித்து டி.ஆர்.பி. அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் அனைத்தும் திருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், புதிய கீ ஆன்சர் பற்றிய வெளியீடும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது.
ஆனால், தகுதித் தேர்வு முடிவு வெளியிடுவது தாமதமாவதற்கு முக்கியமான காரணம், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தமிழ்ப் பாடத்தில் 40 கேள்விகள் தவறானது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளதுதான். இந்தவழக்கு தொடர்பாக அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் டி.ஆர்.பி. தெரிவித்துவிட்டது. இந்த வழக்கின் முடிவு இந்த மாதம் 30ம் தேதி தெரிந்துவிடும். அந்த முடிவு வந்தவுடன், அக்டோபர் முதல்வாரத்தில், தயார் நிலையில் உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும் இறுதி கீ ஆன்சரும் ஒரேநாளில் வெளியிடப்படும்’’ என்றார்.
No comments:
Post a Comment