பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக நடிகர் சூர்யா நடித்துள்ள விளம்பர படத்தை தமிழ்நாடு தீயணைப்புத்துறை தயாரித்துள்ளது. இந்த படங்களை டி.வி. சேனல்கள், தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில்ஒளிப்பரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆர்.சி.குடவாலா கூறியதாவது:-
விபத்து இல்லா தீபாவளிதீபாவளியை, தீ விபத்து இல்லாத பண்டிகையாக பொதுமக்கள் சந்தோஷமாக கொண்டாட வேண்டும். இதற்காக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையை சேர்ந்த அனைவரும் நூறு சதவீத அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறோம்.
முதலில் பட்டாசு கடைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைக்கும் பணிகளை தீவிரமாக பின்பற்றியுள்ளோம். அதாவது,வெடிமருந்து சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தையும் தீவிரமாக பின்பற்றும் வியாபாரிகளுக்கு மட்டுமே பட்டாசு கடை வைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுகிறது.
4,500 பட்டாசு கடைகள்
பட்டாசு கடை அமைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளது. அதில்,4,500 மனுக்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறை பின்பற்றாத 300 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 200 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
அதேபோல, சென்னையில் 1,200 பேர் மனு கொடுத்துள்ளார்கள். அதில், 700 பேருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. 120 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
நடிகர் சூர்யா படம்
தீபாவளிக்கு பட்டாசு அதிகம் வெடிப்பவர்கள் மாணவர்கள்தான். அதனால், பட்டாசு எப்படி வெடிக்கவேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை பள்ளிகள், கல்லூரிகளில் நடத்தி வருகிறோம். மேலும், பிள்ளைகள் பட்டாசு வெடிக்கும்போது,பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் கண்டிப்பாக அருகில் இருக்க வேண்டும்.
இது சம்பந்தமாக நடிகர் சூர்யா மூலம் ஒரு விளம்பர படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம், டி.வி.சேனல்கள், தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் ஒளிபரப்பு செய்யப்படும்.
ராக்கெட் பட்டாசு
இதுதவிர பட்டாசு வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் தீயணைப்பு வீரர்கள் கொடி அணிவகுப்பு பேரணியை நடத்தி வருகின்றனர். வாகன மூலம் பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு ராக்கெட் போன்ற பட்டாசுகள் போடும்போதுதான் தீ விபத்து ஏற்படுகிறது. இந்த ராக்கெட் பட்டாசு எங்களால் தடை விதிக்க முடியாது. வெடிமருந்து சட்டத்தின்படி, மத்திய அரசுதான் தடை செய்ய முடியும்.
இந்த ராக்கெட் பட்டாசு மூலம் குறிப்பாக குடிசை பகுதிகளில் அதிக அளவில் தீ விபத்து ஏற்படுகிறது. சென்னை மாநகரில் மொத்தம் 70 குடிசை பகுதிகள் உள்ளது.
தயார் நிலையில்...
இதில், 54 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலை நிறுத்தப்பட்டிருக்கும். இதுதவிர 50 மெட்ரோ தண்ணீர் லாரிகளும் மாநகரம் முழுவதும் நிறுத்தப்பட்டு இருக்கும். தீயணைப்பு பணியில் 700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
சென்னையில் குறுகிய பாதைகள் கொண்ட பகுதிகள் அதிகம் உள்ளது. குறிப்பாக குடிசை பகுதிகளுக்குள் தீயணைப்பு வாகனங்கள் எளிதில் செல்ல முடியாது. எனவே இதுபோன்ற பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துக்களை ஆரம்ப கட்டத்திலேயே அணைப்பதற்கும், மேலும் பரவாமல் தடுப்பதற்கும் 8 தீயணைப்பு மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்படுகிறது.
நுரை நீர் 2 வீரர்கள் பாதுகாப்பு உடையுடன், இந்த மோட்டார் சைக்கிளில் சுற்றி வருவார்கள். அந்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் 2 சிலிண்டர்கள் கொண்ட 2 தீயணைப்பான் பொருத்தப்பட்டுள்ளது. இதில் தலா 10 லிட்டர் தண்ணீருடன்,நுரைகள் கலந்து அடைக்கப்பட்டு உள்ளது.
தீ மீது நுரையுடன் கூடிய இந்த தண்ணீர் அடிப்பதால், தீ பரவாமல் தடுக்கப்படும். மேலும் மின்கசிவினால் ஏற்படும் தீ விபத்தின்போது இதை பயன்படுத்தலாம். அதாவது, 250 வார்ஸ் மின்சார வயரின் மீது இந்த எந்திரத்தை பயன்படுத்தி நுரைநீரை அடித்து தீயை அணைக்கலாம். வீரர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
சந்தோஷமான தீபாவளிஎனவே பொதுமக்களும் தனக்கும்,பிறருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல், பாதுகாப்புடன் பட்டாசு வெடித்து சந்தோஷமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு இயக்குனர் குடவாலா கூறினார்.
No comments:
Post a Comment