திருக்குறள்

16/10/2013

அரசு பாடப்புத்தகத்தில் மாணவனுக்கு "கவுரவம்"

தமிழக அரசு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தில், திருக்குறள் தெளிவுரைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் வயதில் நுண்ணறிவை பயன்படுத்திய மாணவனுக்கு, "கவுரவம்" கிடைத்துள்ளது.

அரசு பாடப்புத்தகத்தில், தமிழ்பாடத்தில், திருக்குறளுக்கு, சிறுகதைகளுடன் தெளிவுரை கொடுக்கப்படுகிறது. சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின், தமிழ் பாடங்களுக்கு, கார்ட்டூன் படங்களுடன் விளக்கம் கொடுக்கப்படுகிறது. இந்தாண்டு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதில், தமிழ் பாடப்புத்தகத்தில், திருக்குறள் ஐந்து அதிகாரங்களில் இருந்து, ஐந்து திருக்குறளுக்கு தெளிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.அன்புடைமை, அறிவுடைமை, மக்கட்பேறு, இனியவை கூறல், இன்னா செய்யாமை என்ற அதிகாரங்களில் இருந்து, தலா, ஒரு திருக்குறள் இடம் பெற்றுள்ளது.

மக்கட்பேறு என்ற அதிகாரத்தில்,"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" என்ற குறளுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த, உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கொள் காட்டப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே, அரையம்பாக்கம் கிராமத்திலுள்ள, ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதைப் பார்த்த, அக்கிராமத்தைச் சேர்ந்த, சந்தோஷ் என்ற, 11வயது சிறுவன், உடனடியாக, ஊர் மக்களிடம் அந்த செய்தியை தெரிவித்தான். அந்த வழியாக வந்த, "விழுப்புரம் பயணிகள் ரயிலை" ஊர் மக்கள் நிறுத்தினர்.

ரயிலில் பயணம் செய்த பலரின் உயிரை காப்பாற்றிய சந்தோஷ், அரைம்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். சந்தோஷுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினர்.

இதற்கு, "மகனை பெற்றபோது தாய் மகிழ்ச்சி அடைகிறார். அதைவிட, அறிவும் ஒழுக்கமும் நிறைந்தவன், என, தன் மகனைப் பிறர் புகழக் கேட்கும் போது, மேலும் மகிழ்ச்சி அடைகிறார்" என பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த பாடத்தில், சந்தோஷ்க்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், பொன்னாடை போர்த்தி, பரிசு வழங்கிய போட்டோவும் இடம் பெற்றுள்ளது.

"வழக்கமாக, குட்டிக்கதை ஒன்றைக் கூறி, திருக்குறளுக்கு விளக்கும் கொடுத்த நிலை மாறி, உண்மை சம்பவத்தை போட்டோவுடன் பொருள்பட விளக்கும் போது, பாடம் படிக்கும் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் ஏற்படும். திருக்குறள் பொருள் மாணவர்களுக்கு எளிதில் புரியும், மனதில் பதியும். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், சமச்சீர் பாடத்திட்டத்தில், இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது" என அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவனை தொடர்பு கொள்ள, அரையம்பாக்கத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியை தொடர்பு கொண்டபோது, தொடர் விடுமுறை காரணமாக யாரிடமும் பேச முடியவில்லை.

இறுதியில், அரையம்பாக்கம் ஊராட்சி துணைத்தலைவர் வெங்கடேசனை தொடர்பு கொண்ட போது, "2008ல் அந்த சம்பவம் நடந்தது. சந்தோஷை ஊரே தூக்கி வைத்து கொண்டாடியது. சந்தோஷ் தற்போது, மதுராந்தகம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான். அவனது புத்திசாலி தனத்தால், ஊருக்கே கவுரவம் கிடைத்துள்ளது. அவனது அப்பா வேலு, அம்மா சரசு இருவரும் கட்டட தொழிலாளர்கள். அவர்களிடம் மொபைல்போன் வசதியில்லை" என்றார்.

No comments:

Post a Comment