தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் ஜனவரி 24ஆம் தேதி நடைபெறும் என கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஐந்து நிலைகளில் நடைபெற்ற தேர்தலில் 21,027 சங்கங்களில் 2,04,889 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 20,993 பேர் தலைவர்களாகவும், 20,996 பேர் துணைத்தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றனர். இதற்குப் பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களில் சிலர் இறந்து விடுதல் அல்லது தங்கள் பதவியை ராஜினாமா செய்தல் போன்ற காரணங்களால் அவர்கள் வகித்து வந்த பதவிகளில் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டன. இவ்வாறாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் பிற எட்டு செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 316 கூட்டுறவுச் சங்கங்களில் 416 நிர்வாகக்குழு உறுப்பினர் பணியிடங்களும், 65 கூட்டுறவுச் சங்கங்களில் 37 தலைவர் பணியிடங்களும், 31 துணைத்தலைவர் பணியிடங்களும் தற்போது காலிப்பணியிடங்களாக உள்ளன.
மேற்குறிப்பிட்ட 416 நிர்வாகக்குழு உறுப்பினர் பணியிடங்களையும், 37 தலைவர் பணியிடங்களையும், 31 துணைத்தலைவர் பணியிடங்களையும் இடைத்தேர்தல் மூலம் நிரப்புவதற்கான தேர்தல் திட்டத்தையும், தேர்தல் அட்டவணையையும் தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இந்த 416 நிர்வாகக்குழு உறுப்பினர் காலிப்பணியிடங்களில் 82 பணியிடங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவரைக் கொண்டும், 114 பணியிடங்களை பெண்களைக் கொண்டும், 220 பணியிடங்களை பொதுப்பிரிவினரைக் கொண்டும் நிரப்பவேண்டும். தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு கிடையாது.
மேற்குறிப்பிட்ட 316 கூட்டுறவுச் சங்கங்களில் 416 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கும், 65 கூட்டுறவு சங்கங்களில் 37 தலைவர்கள் மற்றும் 31 துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திட்டத்தின்படி தொடர்புடைய சங்கங்களில் இம்மாதம் 4ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதன் பேரிலான ஆட்சேபணை ஏதும் இருப்பின் அதனை 6ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 8ஆம் தேதி வெளியிடப்படும்.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை 20ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை தாக்கல் செய்யலாம். அன்று மாலை 5.30 மணிக்குள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அன்று மாலை 6.00 மணிக்கு தகுதியான வேட்பாளர் பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.
தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புவோர் 21ஆம் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை 5.00 மணிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 24ஆம் தேதி அன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும். வாக்குகளை எண்ணும் பணி 25ஆம் தேதி காலை 10.00 மணிக்குத் தொடங்கும். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு 25ஆம் தேதி அன்று தேர்தல் அலுவலரால் வழங்கப்படும். தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 29ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பெயர் மற்றும் இதர விபரங்கள் குறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரையும், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களான மண்டல இணைப்பதிவாளர்களையும் தொடர்பு கொள்ளலாம்'' எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment