மது விலக்கு கோரி 4ம் வகுப்பு மாணவி அதிரடி உண்ணாவிரதம்.. மதுரையில் பரபரப்பு
|
|
குடிக் கொடுமையால் நானும், எனது குடும்பமும் கஷ்டப்படுவதைப் போல தமிழகத்தில் யாரும் கஷ்டப்படக் கூடாது. அதற்கு தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் 4ம் வகுப்பு மாணவி ஒருவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதத்தில் குதித்தது அனைவரையும் பரபரப்படைய வைத்து விட்டது. மதுக் கொடுமை எந்த அளவுக்கு தமிழகத்தில ஆழ வேறூண்றி மக்களை அழித்து வருகிறது என்பதற்கு இது ஒரு சோகமான உதாரணம். பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 4-ம் வகுப்பு மாணவி ஜோதிமணி செவ்வாய்க்கிழமை காலை உண்ணாவிரதம் மேற்கொண்டார். இவரது தந்தை பெயர் மோகன்ராஜ். இவரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏன் என்பது குறித்து மாணவி ஜோதிமணி நக்கீரனுக்கு அளித்த பேட்டியில், எனது அப்பா குடிப்பழக்கத்துக்கு ஆளானார். அவர் அந்த பழக்கத்திற்கு ஆளானபோது எங்க குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டது. எனக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்டமுடியல. ஸ்கூல் படிப்பை நிறுத்தலாமா என்ற நிலைமை கூட வந்தது. இப்ப எங்க அப்பா நல்லாயிட்டாரு. எங்க அப்பா குடிக்கிறதில்ல.எங்க குடும்பத்தைப் போல வேறு எந்த குடும்பமும் கஷ்டப்படக் கூடாது. என்னைப்போல எந்த பசங்களும், யாரும் கஷ்டப்படக் கூடாது. எந்த பசங்களும் படிப்பை நிறுத்திவிடக் கூடாது. அதுக்காகத்தான் இந்த உண்ணாவிரதம். எங்க அப்பா போல மற்ற அப்பாக்களும் இந்த பழக்கத்தை நிறுத்திவிட்டு என்னைப் போன்ற குழந்தைகளை நன்றாக பாத்துக்கனும். தமிழக அரசும் தமிழ்நாட்டுல பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்றார் ஜோதிமணி. உடன் இருந்த தந்தை மோகன் ராஜ் கூறுகையில், நான் குடிப்பழகத்தில் இருந்து மீண்டுள்ளேன். என்னைப்போல அந்த பழக்கத்திற்கு ஆளானவர்கள் மீளவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று மதுவிற்பனை கூடிக்கொண்டே இருக்கிறது, அரசே குடி குடி என்று சொல்வதைப்போல இருக்கிறது, குடியால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்துள்ளது என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழக அரசும் மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும். மக்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக கூறும் தமிழக முதல்வர், இந்த மதுவிலக்கையும் அமுல்படுத்தவேண்டும் என்றார். சிந்திக்க வைக்கிறது இவர்களின் கருத்தும், அறப் போராட்டமும்!.
No comments:
Post a Comment