அரசு ஊழியர்கள் மனம்மாறினால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று லோக் ஆயுக்த நீதிபதி பாஸ்கர் ராவ் தெரிவித்தார்.கர்நாடக மாநில அரசு ஊழியர் சங்கம் பெங்களூரு, விதானசௌதாவில் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊழலுக்கு எதிரான கருத்தரங்கை தொடக்கிவைத்துஅவர் பேசியது: ஊழலை ஒழிப்பதில் அரசு ஊழியர்களின் பங்களிப்புமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். தன்னை அணுகும் பொதுமக்களை சகோதர சகோதரிகளை போல கருதி, எவ்வித கைமாறும் எதிர்பாராமல் உதவிசெய்வது அவசியம். அரசு ஊழியர்கள் மனம்மாறினால் மட்டுமே ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடியும். அரசு நிர்வாகத்தில் புற்றுநோயை போல ஊழல் படர்ந்துள்ளதால், ஆட்சி நிர்வாகம் சரிவர நடைபெறுவதில்லை. ஊழலற்ற நிர்வாகத்தை அமைக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதுஅவசியம். ஊழலை ஒழிப்பதில் அனைத்துதரப்பினரின் ஒத்துழைப்பு, பங்களிப்பு மிகமிக அத்தியாவசியம். அரசு ஊழியர்களும், பொதுமக்களும் ஒன்றுசேர்ந்து முயற்சித்தால் ஊழல் தானாக காணாமல் போகும். அரசு செயல்படுத்தும் திட்டப்பணிகளில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்துவந்துள்ளன. ஏழைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற எளியோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்திலும் ஊழல், முறைகேடு நடப்பது வேதனை அளிக்கிறது. ஓய்வூதியத்தை பெற ஏழைகள் லஞ்சம் அளிக்கவேண்டுமென்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்நாடக அரசு செயல்படுத்திவரும் அன்னபாக்கியா, அந்த்யோதயா திட்டங்களிலும் ஊழல் நடந்துவருகிறது. பிபிஎல் குடும்ப அட்டைகள் பெறவும் லஞ்சம் தர வேண்டியுள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊழலை ஒழிக்க அரசு செயல்படுத்திவரும் சட்டங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதோடு, அரசின் செயல்பாடுகளில் ஒளிவுமறைவின்மை மற்றும் பாரபட்சமற்ற அணுகுமுறையை கையாள்வது அவசியம். ஊழலை ஒழிக்க வலிமையான புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment