திருக்குறள்

07/09/2013

பழக்க வழக்கத்தை வைத்து ஜாதி சான்றிதழ் மறுக்கக்கூடாது



நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்த இசக்கிராஜ், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த, இந்து காட்டுநாயக்கன் வகுப்பை சேர்ந்தவன். என் சகோதரர்கள் பூமாரிமுத்து, ஆறுமுககனி, மாமா மகன் ராஜேந்திரன் ஆகியோர், இந்து காட்டுநாயக்கன் ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளனர். காட்டு நாயக்கன் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அரசு 2 சென்ட் இடம் வழங்குகிறது. அதன்படி என் தாயாருக்கு அரசு 2 சென்ட் இடம் வழங்கியுள்ளது. நான் இந்து காட்டு நாயக்கன் ஜாதி சான்றிதழ் கேட்டு தென்காசி கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்தேன். ஆனால், நான் இந்து காட்டு நாயக்கன் வகுப்பை சேர்ந்தவன் என்பதற்கு தெளிவான ஆவணங்கள் இல்லை என்றும், சகோதரர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கியதை வைத்தும், தாய்க்கு அரசு 2 சென்ட் இடம் வழங்கியதை வைத்தும் அதே ஜாதி சான்றிதழ் கேட்க முடியாது என்றும், என்னுடைய பழக்கவழக்கம், மற்ற காட்டு நாயக்கன் வகுப்பை சேர்ந்தவர்களின் பழக்க வழக்கத்தில் இருந்து மாறுபட்டு இருப்பதாகவும் சொல்லி, என் விண்ணப்பத்தை தென்காசி கோட்டாட்சியர் நிராகரித்தார். அவரது உத்தரவை ரத்து செய்து, எனக்கு ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்து நீதிபதிகள் பால்வசந்தகுமார், தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு: ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரின் பழக்கத்தையும், அவரது உறவினரின் பழக்கத்தை மட்டும் வைத்து ஜாதி சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது. பழக்க வழக்கம் மாறியிருந்தால், அவர் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் அல்ல என கூற முடியாது. தேவையான, ஏற்கதக்க ஆவணங்கள் உள்ளதா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். மனுதாரரின் சகோதரர்களுக்கும், உறவினருக்கும் காட்டு நாயக்கன் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரரின் தாயாருக்கு, அந்த வகுப்பை சேர்ந்தவருக்கு வழங்கப்படும் 2 சென்ட் இடத்தை அரசு வழங்கியுள்ளது. இந்த ஆதாரங்கள் போதுமானது. மனுதாரருக்கு 4 வாரத்தில் இந்து காட்டு நாயக்கன் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். எக்ஸ்ட்ரா தகவல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 7,94,697 பழங்குடியினர் உள்ளனர். அரசின் பழங்குடியின பட்டியலில் 36 ஜாதிகள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment