தமிழகத்தில் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் முறையாக செல்கிறார்களா என்பதை வட்டார அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிகளில் விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் பணிக்கு வராமல் இருப்பதை கண்டறிந்து தடுப்பதற்காக வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தி மேற்பார்வையிட வேண்டும். ஒவ்வொரு மாவட்ட தொடக்க கல்வி அலுவலரும், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலரும் இணைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வட்டார அளவில் பஸ் வசதி இல்லாத கிராம பகுதிகளில் உள்ள பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து ஒரே நாளில் உதவி தொடக்க கல்வி அலுவலர், மேற்பார்வையாளர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ஆகியோர் பார்வையிட்டு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பணிக்கு வருகிறார்களா என்பதை கண்காணித்து அதன் அடிப்படையில் உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலையில் ஒரு பள்ளி, மாலையில் ஒரு பள்ளியை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் இதுபோன்று திடீர் பார்வைகளை திட்டமிட்டு மேற்கொண்டு வாராந்திர அறிக்கையை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவற்றை தொகுத்து மாதாந்திர அறிக்கையாக தொடக்க கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment