திருக்குறள்

03/09/2013

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியத்துக்கான பரிந்துரை கடிதம் கொடுக்காமல், அலைக்கழித்த திருவெறும்பூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலரை, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, "சஸ்பெண்ட்' செய்ய உத்தரவு

திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், திருச்சி கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் மன்றத்தில் நேற்று நடந்தது. ஓய்வூதிய நலத்துறை சென்னை இணை இயக்குனர் தேவராஜன் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.

ஓய்வூதியர்களிடம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், ஒவ்வொருவரையும் கலெக்டர் ஜெயஸ்ரீ அழைத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் அழைத்து நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். சில மனுதாரர்கள் வராததால், "என்னப்பா இது மனு போடுறாங்க. ஆள் வரமாட்டீங்கராங்களே?' என்றார்.

அதேபோல், கூட்டத்துக்கு வராத அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறையினருக்கு கலெக்டர், "டோஸ்' விட்டார். தொடக்கக்கல்வி துறையில் தான் அதிகளவு மனுக்கள் நிலுவையில் இருந்தன. இதனால், வெறுப்படைந்த கலெக்டர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (டி.இ.இ.ஓ.,) பொன்னம்பலத்தையும், திருவெறும்பூர் ஏ.இ.இ.ஓ., சண்முகத்தையும் கடிந்து கொண்டார்.

திருச்சி, "பெல்' காமராஜபுரம், எழில்நகரைச் சேர்ந்த காளியம்மாள், அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் சாரதா நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி, 2006ல் ஓய்வு பெற்றார். இவருக்கு, 28 ஆயிரத்து, 494 ரூபாய், "அரியர்ஸ்' தொகை வரவேண்டி உள்ளது.

இதுதொடர்பாக, திருவெறும்பூர் ஏ.இ.இ.ஓ., அலுவலகத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, காளியம்மாள் சென்னை ஓய்வூதிய துணை இயக்குனர் அலுவலகத்துக்கு மனு அனுப்பினார்.

இந்த மனு குறித்து, ஏ.இ.இ.ஓ., சண்முகத்திடம், கலெக்டர் ஜெயஸ்ரீ விளக்கம் கேட்டார். "காளியம்மாளுக்கு, "அரியர்ஸ்' பெற தகுதியில்லை' என்று கூறினார். ஆனால், அனைத்து தகுதியும் இருப்பதாகவும், அதுதொடர்பான ஆவணங்கள், ஆதாரங்களை சமர்பித்துள்ளதாகவும் கூறிய காளியம்மாள், அதற்கான ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைத்தார்.

இதைப்பார்த்து கோபத்தின் உச்சிக்குச் சென்ற கலெக்டர் ஜெயஸ்ரீ, ""உங்களுக்கெல்லாம் மனிதாபிமானமே கிடையாதா? இன்றைக்கு பணியில் இருக்கும் நாம், நாளை, அவர்கள் (ஓய்வூதியர்) சீட்டுக்குச் செல்வோம் என்ற எண்ணத்தில் வேலை பாருங்கள். மூன்று ஆண்டுக்கும் மேலாக இழுத்தடித்துள்ளீர்கள். உங்கள் அலுவலகத்தில் தான் ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ளன. இன்று மாலைக்குள் இந்த பணியை முடித்துக்கொடுக்க வேண்டும்,'' என்றார்.

அருகே நின்ற, டி.இ.இ.ஓ., பொன்னம்பலத்திடம், ""ஏ.இ.இ.ஓ., சண்முகம் மீது ஏராளமான புகார்கள் உள்ளது. ஏன் இப்படி இழுத்தடிக்கிறார்? இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளது. எதன்மீதும் உரிய நடவடிக்கை இல்லை. இவரை இரண்டு நாள் உடனடியாக, "சஸ்பெண்ட்' செய்யவும்,'' என்று உத்தரவிட்டார்.

இதைக்கேட்ட டி.இ.இ.ஓ.,வும், ஏ.இ.இ.ஓ.,வும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, கலெக்டரிடம், ஏ.இ.இ.ஓ., கெஞ்சியபடி, பரிதாபமாக நின்றார். அவரை டி.இ.இ.ஓ., பொன்னம்பலம், அழைத்துச்சென்றார். இதனால், ஓய்வூதிய குறைதீர் கூட்டத்துக்கு வந்த மற்ற அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

No comments:

Post a Comment