காமராஜர் பிறந்த நாள்.... கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிப்பு
தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக" கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
''நீதி, நேர்மை, தியாகம், தன்னலம் இல்லா உழைப்பு அத்தனைக்கும் சொந்தக்காரர்.....'' என்று தங்கள் கட்சி தலைவர்களைப்பற்றி தொண்டர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வது உண்டு. மேடையில் தலைவரைப் பாராட்டும் பேச்சாளரின் புகழ் மாலைக்கு பரிசாக உடனே கரகோஷம் கிடைக்கும். ஆனால்... மேடையில் முழங்கிய அந்த வார்த்தைகளுக்கும் அவர்
குறிப்பிட்ட தலைவருக்கும் கொஞ்சமாவது தொடர்பு இருக்குமா என்பது கேள்விக் குறிதான்.
நாட்டின் மீது உறுதியான பற்று, மக்கள் மீது உண்மையான அக்கறை, நீதியை மதிக்கும் தன்மை, அனைவரிடமும் நேர்மை...இன்னும் ஒரு தலைவருக்கு எத்தனை நல்ல பண்புகள் தேவையோ அத்தனையையும் தன்னிடம் கொண்ட செயல்வீரர் பெருந்தலைவர் காமராஜர். இது அவரது வாழ்க்கைப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் கூறும் உண்மை.
15-6-1903-ல் விருதுபட்டி என்ற ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்த காமராஜர் 16-வது வயதில் காங்கிரஸ் கட்சியின்தொண்டர் ஆனார். பின்னர் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். நாட்டின் விடுதலைக்காக பல்வேறு தியாகங்களைசெய்த இவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து பலமுறை சிறை சென்றார். காமராஜர் தனது இளமை காலத்தின் 9 ஆண்டுகளை சிறை கம்பிகளுக்குள்ளேயே கரைத்தார்.செய்த குற்றத்துக்காக சிறை சென்றவர்களுக்கே ''தியாகச்செம்மல்'' பட்டம் கொடுக்கும் இன்றைய அரசியலுக்கும்;வெள்ளையர்களை எதிர்த்து கடுமையான தண்டனைகளை அனுபவித்த அன்றைய அரசியலுக்கும் எவ்வளவு நீளமான ஏணியை
வைத்தாலும் எட்டாது. அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு சிறை தண்டனையை பெருமையாக ஏற்றுக் கொண்டகாமராஜர், சிறையில் இருந்த போதும் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியே சிந்தித்தார்.
கட்சித் தொண்டராக இருந்த காமராஜர் இந்திய விடுதலைக்குப்பின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார்.
சிறு வயதில் வறுமை காரணமாக 6-வது வகுப்பு வரை மட்டுமே படித்தார். என்றாலும், சிறை வாழ்க்கையின் போது தனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார்.தான் படிக்க முடியாமல் போனது போன்ற நிலைமை, தமிழ்நாட்டில் யாருக்கும் வரக்கூடாது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏக்கம் காமராஜரின் மனதில் நிலைத்திருந்தது. இந்த நிலையில் தமிழ் நாட்டின் முதல்-அமைச்சர் பதவி அவரைத் தேடி வந்தது. 13-4-1953 (தமிழ்ப் புத்தாண்டு) அன்று தமிழ் நாட்டின் முதல்-அமைச்சராக காமராஜர் பதவி ஏற்றார்.
காமராஜர் 3 முறை முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றார். மொத்தம் 9 பேரை அமைச்சர்களாக கொண்ட இவரது தலைமையிலான ஆட்சி தமிழ் நாட்டில் 9 ஆண்டு காலம் நடந்தது. இவரது ஆட்சி காலத்தில் ஏழை குழந்தைகளும் படிக்க
வேண்டும் என்பதற்காக இவர் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.
இவர் தனது ஆட்சிக்காலத்தில் 6000 பள்ளிகளைத் திறந்தார். 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்தார். தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆக உயர்ந்தது. அதன் பலனாக தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 7 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக அதிகரித்தது. பள்ளிகளில் வேலை நாட்கள் 180லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.
சென்னை இந்தியத் தொழில் நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது. காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் போது கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், புதிய அணைகளான மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய 9 முக்கிய நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவர் காலத்தில் தமிழகத்தில் பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச்சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனை கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, குந்தா மின் திட்டம், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment